நல்ல அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டும். எதனையும் செய்ய முடியாது மஹிந்த ராஜபக்ஷவுக்கு பயந்தே வாழ்ந்தோம் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் கூறுகையில், நாங்கள் நல்ல அமைச்சுப் பதவிகளுடன் பயந்து வாழ்ந்தோம். எமது சமூகத்துக்காகப் பேசினோம். தம்புள்ளையில் தொடங்கி அளுத்கம வரைக்கும் நடந்த அநியாயங்களை நாடாளுமன்றத்தில் பேசினோம். அமைச்சரவைக்குள்ளே பேசினோம். தைரியமாகப் பேசினோம்.
மஹிந்தவிடம் சொன்னோம். 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நாட்டில் நடந்த இனப்படுகொலையாக அளுத்கமையைப் பார்க்கிறோம் என்று பேசினோம்.
எமது சமூகத்துக்காகப் பேசினோம். நியாயம் கிடைக்கவில்லை. பயந்து வாழும் சமூகமாக பொருளாதாரத்துக்கு ஆபத்து வருவது போல் இந்த சமூகம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகப் பேசினோம். பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இன்று நாங்கள் நேர்மையான ஒரு தலைமைத்துவமாக ரணில் விக்கிரமசிங்கவைப் பார்க்கின்றோம். பொருளாதார மேம்பாடு உடைய ஒரு நாட்டின் தலைவராகப் பார்க்கின்றோம்.
எமது நாட்டில்இ உள்ள பொருளாதாரப் பிரச்சினை தொழில் வாய்ப்புப் பிரச்சினை இன்று பாரிய சவாலாக இருப்பதைக் காண்கின்றோம். யுத்தத்தின் பின்னர் அதன் தேவை அதிகரித்துள்ளது. பொருளாதார வளமுள்ள நாடாகப் பயணிக்க வேண்டியுள்ளது.
ரணில் பிரதமராக வரும் போது இந்த பிரதேசத்தில் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அச்சமில்லாமல் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த முடியும்.
நடக்கவிருக்கின்ற தேர்தலில் பணத்துக்காகவோ, அற்ப சொற்ப ஆசைகளுக்கோ அடிமையாகி உங்கள் வாக்குகளை வழங்கி விடாதீர்கள். இந்த மாவட்டத்துக்கு தலைமை தாங்கக் கூடிய, தைரியமுள்ள ஒருவரைத் தெரிவு செய்யுங்கள்.
தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் வாழக்கூடிய நல்ல தலைமைத்துவம் ஒன்றை கட்டியெழுப்ப உங்கள் வாக்குகளை வழங்குமாறு கூறினார்.
0 comments:
Post a Comment