எமது பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் வேட்பாளருமாகிய பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்தார்.
போரால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் அரங்கு நேற்று கோப்பாயில் நடைபெற்றது.
பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஒழுங்கமைப்பில் முத்துச் சிற்பி அரங்க கூடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் பத்மினி சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஆற்றுப்படுத்தல் அரங்கில் போரால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த, பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.
இங்கு உரையாற்றிய அவர்,
அரங்கச் செயற்பாடுகளின் ஊடாக ஆற்றுப்படுத்தல் என்பது பெண்களின் துன்ப துயரங்களையும், மனத் தடைகளையும் விடுவித்து அவர்களை சிந்தனைக்கும், புதிய செயற்பாடுகளுக்கும் ஊக்குவிக்கும் வெளிகளை உருவாக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு பெண்களும் மற்றவர்களுடன் கலந்து பேசி உறவாடி தம் தடைகளை வென்று புதிய மனங்களுக்குட்படும் போது அவர்களால் தம் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கடந்த
கால அவலங்களை மீட்டிப் பார்த்து தெளிவடையவும் முடியும்.
அவ்வாறான அரங்கில் பங்கு கொண்ட பெண்கள் தம் அவலங்களைக் கண்ணீரால் கதை கதையாகச் சொன்னார்கள்.
கடந்த காலப் போரின் பாதிப்புக்கள் எம் தமிழ்ப் பெண்களை உடல் உள ரீதியாக நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது. கணவனை இழந்தும், அங்கவீனமாயும் காணாமல் போயும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகவும் என்று அதிகம் பெண்களே பாதிப்புக்களை சுமந்து வருகின்றனர்.
இவ்வாறு சொத்துக்களையும் உயிர்களையும் இழந்து நாளாந்தம் நெருக்கடிக்கு உள்ளாகிவரும் எம் பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் அரங்க செயற்பாடு இன்றைய தேவைகளுள் அடிப்படையான தேவையாக உள்ளது.
2009 இன் பின் உடனடியாக செய்ய வேண்டிய இக்காரியத்தை யாருமே செய்ய வில்லை. ஆற்றுப் படுத்தல் ஊடாக பெண்களை ஆளுமையும் சக்தியும் உள்ளவர்களாக மாற்ற முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.
எம் பெண்களை மன ரீதியாக விடுவிக்க வேண்டியது, மீட்க வேண்டியது தேசியத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரினதும் கடமை ஆகும். பெண்களை பலவீனப்படுத்துவதன் ஊடாக அவளை துஸ்பிரயோகம் செய்யவும், சீண்டவும், அவளது பொருளாதாரத்தை முடக்கி, தம்முடன் பேரம் பேசவும் இன்று பலர் அதற்காகவே திட்டமிட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களை சின்னச் சின்ன ஆசைகளை ஊட்டி அவர்களை எதிர்காலக் கனவு காணவிடாதபடி தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்தவும் துணிகின்றனர்.
அந்த வகையில் நம் பெண்கள் தம் கடந்த கால அவலங்களில் இருந்து மீண்டு வரவும், சுய ஆற்றல் ஆளுமையுடன் தமக்கான பொருளாதாரத்தை தாமே கட்டியெழுப்ப முன் வரவேண்டும்.
யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய இடங்களில் தும்பு, பனையோலை, நெசவு, மட்பாண்டம் , துணி உற்பத்தி பயிற்சிகளை ஏற்படுத்தி அவர்களை சுய உழைப்பாளிகள் ஆக்கியது. இப்போது அவர்கள் ஏனைய பெண்களுக்கு தொழில் வழங்கக் கூடிய நிலையில், முன்னோடிகளாக உள்ளனர்.
அவ்வாறு இன்று இந்த ஆற்றுப் படுத்தல் அரங்கில் பங்கு கொண்டுள்ள ஒவ்வொரு பெண்களும் தங்கள் ஆளுமைகளுடன் பலம் கொண்டவர்களாக முன் வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
காணாமல் போன கணவனின் வருகைக்காக வருடக் கணக்காக காத்திருக்கும் பெண்களும், தேடித் தேடி தேசமெங்கும் படிகள் ஏறி ஏமாந்து ஆர்ப்பாட்டங்களில் நம்பிக்கையும் இழந்து காத்திருக்கும் பெண்களும், ஒரு நேரம் கூட நல்ல உணவு இன்றி வருடக் கணக்கில் வறுமையுடன் வாடும் பெண்களும், பாதுகாப்பு இன்றி அச்சத்துடன் வாழும் பெண்களும் என்று வகை வகையாக கொட்டித் தீத்தார்கள்.
தங்கள் அவலங்களால் நிறைந்து போன தங்கள் வாழ்வு பற்றி மனம் விட்டு அழுதார்கள். இது வரை நாளும் மனம் விட்டுப் ,பகிரவும் வெளிப்படுத்தவும் இடம் இன்றி நெருக்கடிக்குள்ளான அவர்கள் மனம் அவர்களுக்கான ஆறுதல் கொடுக்கக் கூடிய உறவுகளின் அரவணைப்பில் மனசாறிப் போனது.
'' உங்களை முதலே சந்திச்சு இருந்தால் நான் அராலிக் கொட்டை சாப்பிட்டு இருக்க மாட்டேன், என்று அழுத பெண்ணைத் தொடர்ந்து , '' வீட்டில் கதவு இல்லை இரவு ஒரு மணி இருக்கும் நேரம், பக்கத்தில ஆறு வயசு மகன் படுத்திருந்தவன் யாரோ வாற சரசரப்பு கேட்டது.
நானும் எழும்பிட்டன் வந்தவன் பக்கத்து காம்பில இருக்கிறவன் எனக்கு முகம் தெரிஞ்சது. விறாந்தைக்கு அவன் ஏற நான், கள்ளன் கள்ளன் என்று பெரிசாக் கத்தினான், சத்தம் கேட்டோனே கழட்டின சப்பாத்தையும் தூக்கிக் கொண்டு ஓடிட்டான்.
'' இப்பிடித்தான் எந்த உதவியும் பாதுகாப்பும் இல்லாமல் பிள்ளையோட நாளும் பொழுதும் எந்த உதவியும் இல்லாமல் நின்மதியும் இல்லாமல் வாழ்றான். என்ற ஒவ்வொரு பெண்களின் கண்ணீருக்கும் எல்லை இருக்கவில்லை.
பாதிப்புக்களும் ஏக்கங்களும் மனக் காயங்களும் அவர்களை நிறைத்து இருந்தது. அவர்களை தொட்டு, அரவணைத்து ஆறுதல் படுத்தி தெளிவு படுத்தி கொண்டு வருகையில் தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்க தொடங்கினர். இவ்வாறான பெண்கள் தம்மைப் போன்று அநாதரவாகிப் போன ஏனைய பெண்களையும் இப் பயிற்சியில் ஒன்றிணைத்து அவர்களின் விடுதலை மிக்க வாழ்விக்கும் வழி காட்ட வேண்டும்.
எனவே நம் பெண்களின் எதிர்காலத் திட்டமிடலுக்கும் அவர்களின் ஆளுமை செழிப்பிற்கும் ஆற்றுப் படுத்தல்கள் அவசியம் காலத்தின் தேவையாக உள்ளது. '' எம் பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பத்மினி சிதம்பரநாதன் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment