தமிழ் மக்கள் யாவரும் ஒன்றுசேரப் போகின்றனர் என்ற பயம் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறான ஒரு கட்டத்தில் தமிழ் மக்கள் நலன்கருதி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை எனவும் பேரவையின் தலைவரும் வடக்கு முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் கருத்துக்களை அறியும் ஒரு நடவடிக்கையாகவும், மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்களை ஒழுங்குபடுத்தி வெளியிடும் நிறுவனமாகவும், மக்கள் நலம் காக்க வேண்டிய மக்கட் பிரதிநிதிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும், எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு இயக்கமாகவுமே தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பேரவையின் ஒன்றுகூடலையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
‘எமது மக்கள் இயக்கம் கருத்துக் கணிப்பில்தான் ஈடுபட முனைந்துள்ளது. தனி மனிதர்களின் தலைமையை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் வருங்கால தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வு, தனி மனித விருப்பு, வெறுப்பு, அறிவு, ஆற்றாமை என்பவற்றில் மட்டும் தங்கியிருப்பது சரியா என்ற கேள்வியை நாம் முன்னெடுக்கின்றோம். அத்துடன், இதுவரை காலமும் தனிமனிதர்களைத் தமது வலைகளுள் விழச் செய்யும் சதிகளில் அரசாங்கங்கள் வெற்றியைக் கண்டு வந்துள்ளன. ஆனால் தனி மனிதர்களுக்குப் பின்னால் மக்களின் ஆளணி திரண்டு நிற்கின்றது என்று கண்டால், எவ்வாறான ஆளணியினரும் அத் தனிமனிதர்கள் போல் சகலதையும் சிந்தித்து ஆராய்ந்து சிறந்த முடிவுகளுக்கு வந்துள்ளார்கள் என்று கண்டால், அரசாங்கங்கள் தனிமனிதப் பேரங்களில் ஈடுபடாது.
அந்த விதத்தில் பார்க்கும்போது எமது தமிழ் மக்கள் பேரவை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வாறுதான் அது கடமையாற்றும்.
இப்பொழுதே தமிழர்கள் யாவரும் சேரப் பார்க்கின்றார்கள் என்ற ஒரு பீதி தென்னிலங்கையில் உருவாகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்தும் அங்கு விரவி வருகின்றது. இதில் ஒரு விடயத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களைத் தழைக்க விட்டால் எமக்கு ஆபத்து என்ற ஒரு அடிப்படைக் கருத்து அங்கு சென்ற நூற்றாண்டிலிருந்து நிலவுகின்றது. ஆகவே தமிழர்களுள் சிலரை நாங்கள் எங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் மூலமாகத் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணம் பெரிய கட்சிகளின் தலைமைப் பீடங்களிடையே பொதுவாக இருந்து வருகின்றது.
ஆகவே தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு இணைத் தலைமைத்துவத்துடன் பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கம் உருவாகின்றது என்றால் அது தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இன்று, மூன்றாவது கட்சிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய காலம் உதித்துள்ளது. கட்சி வேண்டாம் என்று நான் கூறவில்லை. கட்சிகளின் நிர்வாகம், ஒழுங்கமைப்பு, ஒழுக்கம், நோக்குகள் யாவையும் வெளிப்படைத்தன்மையுடனும் நிபுணத்துவச் செறிவுடனும் செயல்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை கட்சிகளினால் இதனைச் செய்ய முடியாதிருந்தாலும் அவற்றிற்குப் பக்கபலமாக நின்று பலதையும் அடியெடுத்துக் கொடுக்கும் வண்ணம் இந்தப் பேரவை செயற்பட இருக்கின்றது.
உதாரணத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை இராணுவ முகாம்கள் இருக்கின்றன, எங்கெங்கே இருக்கின்றன, கிட்டத்தட்ட எத்தனை போர் வீரர்கள் அங்கு இருக்கின்றார்கள் என்ற தகவலை ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி கேட்கும் போது பதிலளிக்க வேண்டியிருந்தால் எமது பேரவை அவற்றிற்கான தரவுகளைச் சேகரித்துத் தரும் என்று நம்புகின்றேன்.
எனவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் கட்சிகளுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிரானதல்ல. தமது தனித்துவத்தை மக்கள் மீது திணிக்க எத்தனிக்கும் ஒரு இயக்கம் அல்ல. மாறாக மக்கள் நலம் நாடும் ஒரு மக்கள் இயக்கம் அது. இதன் தலைமைத்துவம் தனி மனிதர்களின் செல்வாக்கில் கட்டி எழுப்பப்பட்டதன்று. மக்கள் மனமறிந்த, மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவோரின் தலைமைத்துவத்தைக் கொண்டது. இதில் விக்னேஸ்வரன் பங்கு அனுசரணை வழங்குவது மட்டுமே. இதை வைத்துத் தாவிப்பிடிக்கப் பார்க்கின்றான் விக்னேஸ்வரன் என்பதெல்லாம் தாவிப் பிடித்துப் பழகிப் போன தப்பான அபிப்பிராயம் கொண்டவர்களின் தாறுமாறான தவறான கருத்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment