தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற பதவியை விட்டு விலகினால் அவர்களின் அரசியல் வாழ்வு முடிவுரைக்கு வந்துவிடும்..
எனவே கடந்த காலங்களில் இவர்களின் செயற்பாடுகளை சற்று ஆராய்ந்தால் அவர்களின் செயற்பாடுகளின் ஆரம்பகாலம் தொட்டு தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும், தமிழ் மக்கள் சார்பில் வளத்துடன் வாழ வைக்கும் செயற்பாடுகளிலேயே அதிக அக்கரையுடன் இருந்தார்கள். இன்றும் இருந்து வருகின்றார்கள் என்பது புரியும்.
ஆகவே, எமது எண்ணத்தில் ஏற்பட்ட சந்தேகமே இந்த கட்டுரை அரசுடன் புதிய தம்பதிகள் போல், உறவை (எந்த அரசுடனும்)பேணிய போதும் ஏன் அமைச்சர் பதவிகளை மாத்திரம் எடுப்பதில்லை என்பதற்கு ஆதாரம் கிடைத்து விட்டது. ஆகவே, நாம் சற்று பின் நோக்கி அவர்களின் செயலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன்னைய அரசாங்க காலத்திலும் விடுதலைப்புலிகளின் விடுதலை போராட்ட காலத்திலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாக மக்கள் செல்வாக்குடன் இருந்த போதும் அவர்களின் செயற்பாடுகள் இரண்டு விதமாக இருந்து வந்துள்ளது.
அரசாங்க தலைவர்களை, அமைச்சர்களை இரகசியமாக சந்தித்து தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும், சக்தி மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இருந்த போதும், முக்கிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக நேர்மையாகவும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார்கள் இன்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் செயல்படுவதையும் நாம் மறக்க கூடாது. இதன் காரணமாகவே த.தே.கூ தனது நற்பெயரை கொண்டிருக்கின்றது எண்பதே உண்மை.
அவ்வாறு செயல்பாட்டை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மறைமுக எதிர்ப்பையும் அவர்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடவும், உதவிய பல முக்கியஸ்தர்களை நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகார பலம் செல்வாக்குடன் இன்றும் இருக்கின்றார்கள்.
செயற்பாடுகளுக்கு நன்கு திட்டமிட்டு செயல்படுத்த இவர்களுக்கு வேண்டிய(ஆதரவாளர்) அடியாட்களை, வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், அன்றும், இன்றும் வைத்து இருக்கின்றார்கள் . இவர்கள் பாம்பிற்கு தலையும், மீனுக்கு வலையும் காட்டிக் கொண்டு இருப்பதை இப்பொழுது பார்க்கலாம்.(சிலர் இத்தலைமைகளின் உறவினர்களே என்பதும் குறிப்பிடதக்கது).
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக கிழக்கு மாகாண தலைநகரை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் கௌரவ.சம்பந்தன் அவர்களை நியமித்த போதும், அவர் சிறந்த அனுபவசாலி சட்டத்தரணி, பொருமையாக விடயங்களை கையாளும் திறன் கொண்டவர் என்றே நாம் பாக்கின்றோம்.
அவரின் மறுப்பக்கத்தை தமிழ் பொது மக்கள் என்றும் பார்த்ததும் இல்லை. பார்க்க நினைத்ததும் இல்லை. ஆனால் அவரின் மறுப்பக்கம் அனைத்தும் முழுதும் தனக்கும், தனக்கு வேண்டியவர்களின் சுயநலத்திற்கும், எதை எப்படி செய்ய வேண்டும் என்ற திறமை படைத்தவர்.
இவர்கள் உண்மையில் மனது வைத்திருந்தால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை எப்பொழுதோ தீர்த்திருக்க முடியும் . இவர் சில வாரங்களுக்கு முன் தனியார் ஊடகத்திற்கு நேரடியாக வழங்கிய செவ்வியில் ஒர் கருத்தை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியது விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எப்பொழுதும் எந்த சந்தர்ப்பத்திலும் தொடர்புகள் கிடையாது என்றும், அவரின் சொந்த மாவட்டமான திருகோணமலையை பொருத்தவரை உறுதியாக எந்த தொடர்பும் இல்லையெனவும் ஏனைய பிரதேசங்களை பொருத்தவரை அப்படி ஏதும் தொடர்பு இருந்ததா என்பதும் கூட தனக்கு தெரியாது என்று கூறி தமிழர்களை உரிமையுடன் வாழ வைக்க நினைத்து போராடிய தெய்வங்களை கேவலம், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்து விட்ட காரணத்தால் நன்றி மறந்து கூறுகின்றார்.விடுதலைப்புகள்விடுலைக்காக போராடியவர்களே தவிர, அரசு கூறுவது போல் பயங்கரவாதிகள் இல்லை என்பதே உலக தமிழ் மக்களின் உறுதியானதும், இறுதியானதுமான தீர்மானம். இதை தனது சுய நலத்திற்காக மாறுப்பட்ட கருத்தை கூறியது மன்னிக்க முடியாத தவறு என்பதே எமது கருத்தாகும்.
அதேபோல் கடந்த வாரத்தில் அவர் கூறிய கருத்தின்படி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்தவர்கள் எல்லோரும் மக்கள் நிராகரித்தவர்கள் என்றால் எப்படி த.தே.கூ அவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்களை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு இருவரை தெரிவு செய்தீர்கள் ? இது எனக்குள் எழுந்த கேள்வி ? தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஆயிரம் வாக்குகளை பெற்றாலும் அவரும் மக்கள் பிரதிநிதியே ஆனால் அவர் தற்காலிகமான பின்னடைவையே சந்தித்துள்ளார் என்பதே எனது பணிவான கருத்தாகும். அவரின் இந்த கருத்து தமிழ் மக்கள் பேரவைக்கு கிலேசம் அடைந்துள்ளதையே காட்டுகின்றது.
இந்த வகையில் கடந்த ஐ.தே.க ஆட்சி காலமானாலும் மகிந்த ராஜபக்ச ஆட்சி காலமானாலும் த.தே.கூட்டமைப்பின் ஒரு சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகள் சிறப்பான வாழ்க்கையும், அரசின் அத்தனை வரப்பிரசாதங்களையும், அமைச்சர்கள் பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாகவே, இவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்பது ஆளும் அரச முக்கியஸ்தர்கள் மூலம் கசிந்த உண்மையாகும்.
அதே நேரம், அரசு இவர்களுக்கு அமைச்சர் பொறுப்புக்களை வழங்க முன் வருகின்ற போதும், அதை ஏற்கப் போவதில்லை என்ற வீராப்பு வசனங்களுடன் கூறும் காரணம் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் போதே அதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் என்று கூறி எம்மை ஏமாற்றினாலும் அரசுடன் நெருக்கத்துடனேயே இருப்பார்கள். வேறொருவர் அமைச்சராக வந்துவிட்டால் அவருக்கு எதிராக மக்களை செயல்பட வைப்பார்கள்.
அந்த தீர்வு எப்பொழுது வரப்போகின்றது……..? அதுவரை அம் மக்களின் பெயரை ஏலமிட்டு சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்பதேயாகும். புதிய அரசு ஆட்சிக்கு வந்த போதும், கிழக்கு மாகாணத்தில் மாகாண சபையை கைபற்றிக்கொள்ள வாய்ப்பு இருந்தும், அதை ஏற்க மறுத்தமைக்கான காரணம், தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்ந்தால் மாத்திரமே இவர்களால் ஆடம்பரமாக மக்கள் பணத்தில் உல்லாசம்அனுபவிக்க முடியும் இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்க்கை நடாத்த தெரிந்த தமிழ் மக்களைின் பிரச்சினைகளை தீர்க்க அரசுடன் பகைத்துக்கொள்ளாது இருக்கவே இவர்கள் பதவி வேண்டாம் ஆனால் த.தே.கூ முக்கியஸ்தர்களுக்கு மாத்திரம் வசதிகளை மாத்திரம் தாருங்கள் என்று கேட்பார்களோ என்பதற்கான சந்தேகம் எமக்கு தோன்றியதில் தவறு ஏதும் இல்லை.
அதே போல் தற்போதைய அரசு இரண்டு அமைச்சர்களை நியமித்துள்ளது. கௌரவ சுவாமிநாதன் மற்றும் கௌரவ. விஜயகலா மகேஸ்வரன் இவர்கள் தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை தீர்க்க பாடுப்பட்டாலும் அதன் வெற்றியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு சாதகமாக்கி கொண்டுதான் இன்றுவரை இருக்கின்றது.
வடக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூ ட்டமைப்பு அதிகாரத்தில் இருந்தாலும், அங்கு பொது மக்களுக்காக சேவை செய்கின்றவர்களை ஒரம் கட்டும் செயற்பாடுகளையே கூட்டமைப்பின் அதிகார வர்க்கம் செய்கின்றது.
பலவிதமான கொள்கைகளையும் சிந்தனைகளையும் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்தே, இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. இங்கு இதன் செயல்பாடுகளோ ஒரு கட்சிக்கு நெய்யும் ஏனையவற்றுக்கு, நெருப்பையும் கொடுக்கும் செயற்பாடுகளையே, இரகசியமாக கடந்த காலங்களில் கூட்டமைப்பின் அதிகார பலம் கொண்டவர்கள் செய்து வந்தார்கள்..
ஆற்றை கடக்கும் வரை அண்ணன் தம்பி . கடந்த பின் நீ யாரோ? நான் யாரோ? என்ற கொள்கையையே தற்போதைய கூட்டமைப்பின் அதிகாரம் மிக்க தலைவர்கள் செய்து வருகின்றார்கள். இதனால் பாதிப்பு கட்சிகளுக்கு அல்ல. அதை நம்பி வாக்களித்த பொது தமிழ் மக்களுக்கே உரித்தாகும்.தமிழ் மக்களின் பிரச்சினைகளை காட்டியே காலத்தை கடத்த நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதிலேயே கவனத்தை செலுத்துகின்றதே தவிர தமிழ் மக்களுக்குறிய பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனத்தை செலுத்த மறந்துவிட்டது.உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளும், இந்த அரசின் மூலம் தீர்வை பெற பல்வேறு வகையிலும், உதவிகளையும் ஒத்தாசைகளை வழங்கியே வருகின்றது. ஆனால் நடப்பது என்னவோ தொடர் கதையே…………?
தமிழ் மக்களக்குள்ள பிரச்சினைகளில்
1) குறுகிய கால பொருளாதார வாழ்வாதார தீர்வுகள்
2) அப்பாவி அரசியல் கைதிகளின் விடுதலை
3) எதிர்கால பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கான வசதி வாய்ப்புக்கள் சொந்த நிலங்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கான உறுதி
4) அரசியல் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு
இதில் இழுத்தடிப்பு செய்யக்கூடியது அரசியல் தீர்வேயாகும்
ஆனால் முதல் மூன்று விடயங்களையும் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க முடியும். ஆனால் த.தே.கூட்டமைப்போ நான்காவது பிரச்சினையையே முதலாவது பிரச்சினையாக்கிக்கொண்டுள்ளது.
இக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் சட்டதரணிகளாக இருப்பதால் சகல பிரச்சினைகளையும், சட்டத்தின் அடிப்படையில் தீர்க்க நினைக்கின்றார்கள். இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. உதாரணம் முஸ்லிம் தலைவர்கள் குறுகிய கால தீர்வு நீண்ட கால தீர்வு என்ற அடிப்படையிலேயே அவர்கள் அம் மக்களை வழி நடத்தி செல்கின்றார்கள். இத்தலைவர்கள் எதை செய்தாலும் அதன் முழுமையா பலன் அச்சமூகத்திற்கே பயன்படுகின்றது ஆனால் கூட்டமைப்பின் செயல்பாடுகளோ அந்த முக்கியஸ்தர்களின் குடும்பம் அல்லது அவர்களின் உறவினர்கள் அல்லது வேண்டப்பட்டவர்களுக்கே செல்கின்றது.
மனிதபிமான முறையில் நாம் குறிப்பிட்ட முக்கிய பிரச்சினைகளை அணுக வேண்டும். சட்ட சிக்கல் வந்தால் அதை ராஜதந்திரமுறையில் தீர்க்கப்படல் வேண்டும்.
அதற்கு இவர்கள் இப்பொழுது அரசுடன் வைத்திருக்கும் உறவே போதுமானதாகும். இன்று கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர்கள் அனுபவிக்கும்வரப்பிசாதங்களை விட அதிகமாகவே அனுபவித்துக் கொண்டுத்தான் இருக்கின்றார்கள்.
சிலர் இன்றும் சிறப்பான தியாக சிந்தனையுடன் நேர்மையான பாராளுமன்ற உறுப்பினர்களாகத்தான்,செயல்படுகின்ரார்கள். இதன் காரணமாகவே கட்சி பாதுகாப்பாக இருக்கின்றது என்பது உண்மையாகும்.
அரசுடன் மிக நெறுங்கிய தொடர்புடன் தலைமைகள் இருந்தாலும், அமைச்சர் பொறுப்பை ஏற்காமல் இருந்தால், கோவில் மாடுகளை போல் சகலவற்றையும் இலவசமாக அனுபவிக்கலாம் என்ற நோக்கமே தவிர மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல. சேவைசெய்யாது சேவைசெய்பவர்களின் மீது குற்றங்களை சுட்டிகாட்டி தன்னை காப்பாற்றிக்கொள்ளவே அதிகாரத்தை பயன்படுத்துகின்றது.
தற்போதைய அமைச்சர்களாக பதவியில் இருப்பவர்கள் அமைச்சின் மூலம் அவர்கள், எவ்வளவு சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்தாலும், அவர்களால் தமிழர்களின்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் அதிகாரம் அற்றவர்களாகவே இருக்க போகின்றார்கள்.அதை முன்னிலைப்படுத்தி தங்களுக்கு சாதகமாக்கி தொடர்ந்து மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் பேரவை வந்து விட்டதாக நினைக்காது.
அரசு சார்பாக தற்போது இருக்கும் அமைச்சர்கள் அதே போல், ஜனாதிபதியின் தனி ஆதரவுடன் செயல்படும் கௌரவ அங்கஜன் இராமநாதன் போன்ற தமிழ் தலைமைகளையும், அரவணைத்து தமிழ் மக்களின் குறுகிய கால, இடைகால, நீண்டகால தீர்வுகளாக பிரச்சினைகளை வரையறுத்து ஒற்றுமையாக செயல்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வராவிட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைக்களுக்கான தீர்வு என்றுமே எட்டப்படப்போவதில்லை.
ஆகவே அரசின் உறவை பயன் படுத்தி முதலில் தற்காலிக தீர்வை தீர்த்து வையுங்கள். இல்லையேல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை 2016 ம் ஆண்டில் மக்கள் ஒதுக்கும் முடிவுரையாகலாம்.
-இராவணன்-
0 comments:
Post a Comment