இலங்கையின் கொட்டதெனியாவ என்ற இடத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன் (15/03/2016) ஆஜர்ப்படுத்தப்பட்ட சமன் ஜயலத் என்ற அந்த நபருக்கு நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தார்.
சிறுமியை கடத்தியது, அவரை கடுமையாக பாலியல் சித்தரவதைக்குட்டுத்தியது, பாலியல் துஷ்பிரயோகம் செய்தது மற்றும் கொலை செய்தது ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யட்டடது.
இந்த வழக்கை ஆராய்ந்த நீதிபதி, மரபணு பரிசோதனை உள்ளிட்ட சாட்சியங்கள் சந்தேக நபருக்கு எதிராக இருந்ததால் அவருக்கு மரண தண்டனையை அறிவித்தார்.
கொட்டதெனியாவைச் சேர்ந்த சேயா சதேவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமி, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரெனக் காணாமல் போனார்.
இவ்வாறு காணாமல்போன சேயா, இரண்டு நாட்களுக்குப் பின்னர் காடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது
இந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், முன்னதாக பள்ளி மாணவர் ஒருவரை கைதுசெய்தனர்.
எனினும் இந்த மாணவர் குற்றச்சாட்டு எதுவுமின்றி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குடும்பஸ்தர் ஒருவரும், தற்போது தண்டனைக்குள்ளாகியிருக்கும் இளைஞனின் சகோதரனான கொண்டாயா என்ற நபரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், பிரதான சந்தேக நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார்.
தற்போது இவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் கொலைசெய்யப்பட்ட சேயாவின் பெற்றோர் உட்பட சுமார் 30 பேரிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றது.
இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்திருந்த கொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவின் தாயார், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தனது மகளின் படத்தை ஊடகங்களில் பிரசுரிப்பதை தவிர்க்கும்படியும் கோரினார்.
0 comments:
Post a Comment