யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படவிருக்கும் 65,000 வீட்டுத்திட்டத்தைக் குழப்புவதற்கு அரசியல் நோக்கத்துடன் சில உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவில் இரும்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் லக்ஷ்மி மிட்டாலினால் நிர்வகிக்கப்படும் சர்வதேச நிறுவனமான ‘அர்செலர் மிட்டால்’ நிறுவனத்தினூடாகவே இவ்வீட்டுத் திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் தரம் தொடர்பாக வளர்ந்து வரும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேரில் சென்று மாதிரி வீடுகளைப் பார்வையிட்டு அவற்றின் தரம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திசெய்து கொண்டதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதிரி வீடுகளின் தரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் ஆகியோர் திருப்தியடைந்துள்ளனர். குறித்த வீடுகளின் தரம் தொடர்பாக இடம்பெயர்ந்த மக்களுடனும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அவர்களின் பொதுவான நிலைப்பாடு என்னவெனில், மாதிரி வீடுகள் தரம்வாய்ந்தவை என்பதாகும்.
மறுபக்கத்தில், இவ்வாறான வீட்டுத்திட்டமொன்றை அமைப்பது உள்ளூர் வேலையாட்கள் மாத்திரமன்றி உள்ளூர் ஒப்பந்தகாரர்களுக்கும் சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அமைச்சரவையின் பேரம்பேசும் குழு அனுமதி வழங்கியதற்கு அமைய அர்செலர் மிட்டால் நிறுவனத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுப்பதில் எதுவித பிரச்சினையும் அரசுக்கு இல்லை என குறித்த திட்டத்தை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சுயநலம் கொண்ட உள்ளூர் ஒப்பந்தகாரர்களே இத்திட்டத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் ஒப்பந்த காரர்கள் கடந்த ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் முன்னெடுத்த திட்டங்கள் பல வெளிப்படைத் தன்மையற்றவை என்பதுடன் அவற்றுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
இவ்வாறான பின்னணியில் வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவிருக்கும் வீட்டுத் திட்டத்தில் பங்கெடுப்பதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர். இதன் ஒரு அங்கமாகவே அமைக்கப்படவிருக்கும் வீடுகளின் தரம் குறித்துக் கேள்வியெழுப்புகின்றனர். குறித்த உள்ளூர் ஒப்பந்தகாரரின் உள்நோக்கத்தை அரசாங்கம் நன்கு உணர்ந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், வெப்பநிலையை கட்டுப்படுத்தும் முறை, கணனி வசதி, தொலைக்காட்சி, சமையலறை உபகரணங்கள், இலவச மின்சார இணைப்பு, தளபாடங்கள், சூரியசக்தி கலம் என பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இவ்வீடுகள் அமைக்கப்படவிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
பெறுமதி சேர்க்கைகள் மேலதிக செலவீனமாக இருந்தாலும் தரமான, உறுதியான வீடுகளை அவர்கள் வழங்குவார்கள். இவ்வாறான சகல வசதிகளுடனும் 550 சதுர அடி வீட்டை அமைப்பதற்கான செலவீனத்தை மதிப்பிடுவதற்கு விஞ்ஞானியாக இருக்கத் தேவையில்லை என அமைச்சர் விளக்கமளித்தார்.
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் கடந்த ஐந்து வருடங்களுக்குள் முன்னைய அரசாங்கத்தால் ஆயிரம் வீடுகளை மாத்திரமே அமைக்க முடிந்தது.
அதனால்தான் எமது அரசாங்கம் அமைக்கவிருக்கும் 65000 வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் வழியில் தடையாக நிற்கின்றனர்” என்று தெரிவித்த அமைச்சர், உள்ளூர் ஒப்பந்தகாரர்களின் அரசியல் ஆர்வத்துக்கன்றி இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment