சர்வதேச மகளீர் தின உரை ;நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்



மகளிர் விவகாரப் பிரிவு, சுகாதார அமைச்சு வடமாகாணம் சர்வதேச மகளிர் தினம் – 2016 09.03.2016 மாலை 2.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபம் – யாழ்ப்பாணம்

பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா……….
தலைவர் அவர்களே, கௌரவ இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, கௌரவ வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்களே, கௌரவ கல்வி அமைச்சர் திரு.குருகுலராஜா அவர்களே, கௌரவ இந்தியத் துணைத்தூதுவர் திரு.அ.நடராஜன் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, உயர் அலுவலர்களே, மகளிர் குழுக்களின் அங்கத்தவர்களே, மற்றும் எனதினிய சகோதர சகோதரிகளே,
2016ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவகாரப் பிரிவினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
‘நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள்’ என்ற தேசிய மட்ட கருப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்ற இந் நிகழ்வானது வடமாகாணத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள பெண்களின் தேவைகளையும் அத்தேவைகளை நிறைவேற்றக் கூடிய செயற்பாடுகளையும் முதலில் இனங் கண்டு அவற்றை ஆவணப்படுத்தி அதன் பின்னர் நடைமுறைப்படுத் என்ன என்ன செய்ய வேண்டும் போன்ற கலந்தாலோசனைகளை நடாத்தவும் வாய்ப்பளிக்கும் நிகழ்வாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
பெண் சமத்துவம், பெண்களுக்கான கல்வி மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்களை நாம் சுப்பிரமணிய பாரதியின் காலத்தில் இருந்தே ஆராய்ந்து வந்து கொண்டிருக்கின்றோம். அக் காலத்தில் பெண்கள் கல்வி கற்பதற்கு பன்னிரண்டு வயது வரை தான் பாடசாலைக்குச் சென்று வருவார்கள். அவர்கள் பருவமெய்திவிட்டால் அதன் பின்னர் அவர்களைப் பாடசாலைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
அக்காலத்திலே பெண் விடுதலை பற்றி பாரதி உட்பட பல முற்போக்குச் சிந்தனையாளர்களும் அரசியல் தலைவர்களும் இடித்துரைத்ததன் பயனாக இன்று பெண்கள் கல்வியில் மேம்பட்ட ஓர் நிலையை அடைந்திருப்பதை நாம் அவதானிக்கின்றோம். பெண்கள் வௌ;வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைத்துத் துறைகளிலும் தமது ஆற்றல்களையும், திறன்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் ஒரு வலைப்பின்னலில் தசை நார்கள் புடைத்துக் கொண்டு நிற்கும் ஒரு இராட்சச வடிவான மிக உயர்ந்த நெடிய பெண்ணொருவரைக் காட்டினார்கள். இரண்டு மூன்று திடமிக்க ஆண் மல்யுத்த வீரர்களை ஒரேயடியாகப் புரட்டிப் போட்டதையும் காட்டினார்கள். ஆர்னல்ட் சுவாஷநேகர் போன்ற உடல் வடிவம் அந்தப் பெண்ணுக்கு இருந்தது. வாய்ப்பிருந்தால் எதையுஞ் சாதிக்க முடியும் என்று கூறுவது போல் இருந்தது அவரின் தோற்றமும் நடவடிக்கைகளும்.
வடக்குக் கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் இடம்பெற்ற நீண்ட கொடிய யுத்தத்தின் பயனாக பெண்கள் எமது பாரம்பரிய கலாச்சார பின்னணிக்கு அமைவான பல தொழில்களுக்கும் மேலதிகமாக ஏற்கனவே செய்யாத பலவிதமான தொழில்களைப் புரிய வேண்டியவர்களாகவும் சமூக கதாபாத்திரங்களை வகிக்க வேண்டியவர்களாகவும் உந்தப்பட்டனர். எமது புள்ளி விபரக் கணக்கின் படி வடக்குக் கிழக்கில் 89 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இக் கொடிய யுத்தத்தினால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்குறிப்பிட்ட 89 ஆயிரம் குடும்பங்களினுடைய தலைமைப் பதவியையுந் தாமே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு இக் குடும்பங்களின் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக இவர்கள் பாரிய பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர்.
இது பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்ட வடக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகளும், புனர்வாழ்வு, சிறுவர் பராமரிப்பு சேவைகள், மற்றும் மகளிர் விவகார அமைச்சானது இன்றைய பெண்கள் தமது நடைமுறை வாழ்க்கையை நடாத்துவதில் அவர்களுக்கிருக்கும் சமூக விழுமியத் தடைகள் பற்றி ஆராய்ந்தது. மேலும் அவர்களின் மனப்பாங்குகள், அரச, அரச சார்பற்ற அபிவிருத்தித் திட்டங்களின் அணுகுமுறைகளில் இருக்கக் கூடிய பிரச்சனைகள், சேவை இடைவெளிகள் போன்றவற்றையும் அடையாளப்படுத்திக் கொள்ள ஆராய்வுகளை நடாத்தியது. அவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட போது பலவகையான பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் அடையாளங் கண்டார்கள். அவ் ஆய்வின் படி
தனியாகக் குடும்பத் தலைமையைத் தாங்;கி நிற்கும் பெண்கள் ஒரு வகைவன்முறைக்குட்படுத்தப்பட்ட அல்லது வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்கள் இன்னொரு வகைஉடல், உள ரீதியாக விஷேட தேவைகளையுடைய பெண்கள் மற்றொரு வகைமுன்னாள் போராளிகள் மேலும் ஒரு வகைபாதுகாப்பற்ற இளவயதுப் பெண்கள் ஒரு வகைபணிப் பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் இன்னுமொரு வகைதிருமண அந்தஸ்துப் பெறாத பெண்கள் மற்றுமொரு வகையென
பல வகைகளாக அவர்கள் வகுக்கப்பட்டு அவர்களின் பிரச்சனைகள் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டு அறிக்கை வடிவமாக வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக வடமாகாணத்தில் காணப்படுகின்ற, போருக்குப் பிந்திய தற்காலச் சூழ்நிலையில், பெண்களின் நிலை பற்றி ஒவ்வொரு அமைச்சும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து அவர்களுடைய தேவைகள் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் சுய தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்கள் பற்றியும் கூடுதலான அக்கறை காட்டி வருகின்றன. பெண்களின் நிலைபற்றி ஒரு திணைக்களமோ அமைச்சோ மட்டுமென்றில்லாமல் ஒவ்வொரு அமைச்சும் அதன் கீழுள்ள திணைக்களங்களும் அந்தந்தத் துறைகளில் ஈடுபடும் பெண்களின் நலன் பற்றி ஆராந்தே வருகின்றார்கள்.
குடும்பத்தில் நிம்மதியாக மனைவிக்கே உரிய சீரிய கடமைகளைப் புரிந்து கொண்டு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த பல குடும்பப் பெண்கள் ஒரு கண நேர பாதிப்பின் பயனாக குடும்பத் தலைவர்களை இழந்து தமது குடும்பப் பொறுப்புக்களைத் தாமே ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தந்திற்கு ஆளானார்கள்.
அன்றாட உணவுத் தேவை, உறைவிடம், பாதுகாப்பு, சமூக அந்தஸ்து ஆகிய பல விடயங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவர்களைச் சார்ந்தது. சிந்திக்க நேரம் வழங்கப்படாமல் இத்தனை சுமைகளும் அவர்களின் தலைமீது திணிக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் துவண்டு விழுந்த பெண்கள் பலர் அடுத்த நிமிடமே தம்மைச் சுதாகரித்துக் கொண்டு முன்னைய எந்த அனுபவமும் இன்றி திணிக்கப்பட்ட சுமைகளைத் தாங்கியவாறு நடைபயிலத் தொடங்கியுள்ளார்கள். சமூகத்தில் தொடர்ந்து இடைவெளியில்லாது தமது வாழ்க்கை முறைமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வேண்டிய அனைத்துக் கடமைகளையும் ஆற்ற வேண்டியவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள் அவர்கள். சமூக, குடும்ப கடப்பாடுகளுடையவர்களாக ஆக்கப்பட்டுள்னர்.
இவர்களுக்கு உதவுவதற்காக எத்தனையோ சமூக அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் எனப் பலரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போதிலும் இத்திட்டங்கள் ஒன்றோடொன்று ஒழுங்குபடுத்தப்படாது அவை தொடர்பற்றதாகி முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவற்றின் செயல் வடிவங்கள் திறமையற்றதாக மாற்றப்பட்டு விடப்பட்டுள்ளன.
இதனால்த்தான் பல சர்வதேச நிறுவனங்களின் உதவியுடனும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உதவியுடனும் வடமாகாணத்தின் போரின் பின்னதான தேவைகளைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொண்டு அரசாங்கம் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கௌரவ பிரதம மந்திரியிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவ்வாறான முழுமையான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்;டால் திட்டங்கள் ஒவ்வொன்றும் எங்கெங்கே எவ்வாறு உள்ளடக்கப்படவேண்டும் என்று முடிவெடுக்கச் சுலபமாக இருக்கும். எமக்கான வருங்கால மாகாண ரீதியான தூர காலத் திட்டங்களை வகுக்கவும் அப்பேர்ப்பட்ட தேவைகள் பற்றிய ஆய்வறிக்கை உதவி புரியும். சில வேளைகளில் இன்று நாம் வகுக்குந் திட்டங்கள் குறித்த ஆய்வறிக்கையின் பின்னர் மாற்றப்படவும் வாய்ப்பிருக்கின்றது. மேலும் வலுப்படுத்தவும் வாய்ப்பிருக்கின்றது. எனினும் எம்மாகாணத்தைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற குறித்த தேவைகள் பற்றிய சர்வதேச நிறுவனங்களின் ஆய்வறிக்கை அத்தியாவசியமெனப் புரிந்து கொண்டுள்ளோம்.
முதலமைச்சர் நிதியம் இன்னமும் அமைக்கப்படாத நிலையிலும் எமது அமைச்சு ‘உதவிப்பாலம்’ என்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மிக அவசரமானதும் அவசியமானதுமான சுயதொழில் முயற்சி தொடர்பாக பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நாம் உதவிகளை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் எம்மால் வழங்கப்படக்கூடிய உதவிகள் பலவரையறைகளுக்குக் கட்டுப்பட்டே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாழ்வாதார உதவிகள் அன்றாடத் தேவைப் பொருட்களை வழங்குதல் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகளுக்கு பயன்படுவனவாகவே இருக்கின்றன. மக்களின் தேவைகள் மலையளவாக உள்ள போதிலும் எமது உதவிகள் மிகக் குறைந்த அளவினதாகவே அமைந்து விடுகின்றன. எனினும் எமது மக்களின் தேவை பற்றிப் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம். நாம் செல்லும் இடங்களில் எல்லாம் எமது உரைகளில் மகளிர் பற்றியதானதும் வயோதிபர்கள் போன்ற மற்றையவர்கள் பற்றியதானதும் நிலைமை பற்றியும் அவர்களின் தேவைகள் பற்றியும் எடுத்துக் கூறிவருகின்றோம்.
இன்று பல சமூக அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இவர்களுக்கான சுயதொழில் முயற்சி, வங்கி இலகுக் கடன் திட்டம், வர்த்தகம் போன்ற விடயங்களில் உரிய பயிற்சிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கிவருவதை நாம் அவதானிக்கின்றோம். இவற்றுள் சில பெண்கள் அமைப்புக்கள் மிகத் திறம்பட செயலாற்றுகின்றன. கடன்களைத் திரும்பக் கட்டுவதில் பெண்கள் காட்டும் நேர்மையும் சுறுசுறுப்பும் எமக்கெல்லாம் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன. இவ்வாறான செயற்திட்டங்கள் அனைத்து சமூக மட்ட அமைப்புக்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயல்களினால் மக்களின் தேவைகள் ஓரளவாவது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அது போதாது. முழுமையான ஆராய்வும், ஆய்வும், திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு ஒழுங்குக்கு அமைவாக செயற்திடடங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இன்று யாழ்ப்பாணத்தில் எண்ணற்ற வங்கிகள் தமது வங்கிச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றன. இவ் வங்கிகள் பெண் தலைமைத்துவ அமைப்புக்களின் தேவைகள் பற்றி விரிவாக ஆராய்ந்து அவர்களின் தேவைகளை வங்கிகள் நிறைவு செய்யக் கூடிய வகையில் இலகு தவணைக் கடன் முறைமைகளை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.
இந் நிலைமைகள் பற்றி இவ் அமைப்புக்களை மேற்பார்வை செய்யும் திணைக்களங்கள், அமைச்சுக்கள் மிகக் கூர்மையாக அவதானித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி உதவ வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் சில நிறுவனங்கள் சேவைகளை வழங்குவதற்கு மாறாக ஆசை வார்த்தை காட்டி அவர்களிடம் இருப்பதையும் பறித்துச் செல்லக் கூடிய பல நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளோம்.
அடுத்ததாக வன்முறைக்குட்படுத்தப்பட்ட அல்லது வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற குடும்பங்கள் மீது நாம் மிகக் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். பெண்களின் பாதிப்பு இவற்றில் மிக மோசமானதாக அமைவதை நாம் அவதானிக்கலாம். இராணுவத்தினரின் வன்புணர்வுக்கு ஆளாகிய பெண்கள் வசிக்கும் இடங்களுக்கருகாமையில் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முகாம்கள் இன்னமும் இருந்து வருவதை ஒரு வலைப்பின்னல்ச் செய்தி நேற்று குறித்துக் காட்டியுள்ளது. கொடிய யுத்தத்தின் காரணமாக திருமண வயதிற்கு முன்பதாகவே மிகச் சிறு வயதில் இப்பெண்கள் மணம் முடித்து, குழந்தைகளைப் பெற்றுப் பின்னர் கணவன்மார்களை இழந்த இளம் விதவைப் பெண்களாகக் காட்சி அளிக்கின்றார்கள். இவர்கள் இராணுவப் பிரசன்னம் மிகக் கூடுதலாக காணப்படுகின்ற பகுதிகளில் வசிக்கக் கூடிய இளம் பெண்கள், விதவைத் தாய்மார், கணவன்மார்களை இழந்த குடும்பப் பெண்கள் போன்றோர் மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளனர். இவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற வன்முறைகளில் இருந்து இவர்களை மீட்டெடுப்பதற்கு நாம் தொடர்ந்தும் பாடுபட வேண்டும். இவர்களுக்கு உதவுவது போல் பல நாடகங்களை அரங்கேற்றி ஈற்றில் இவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகின்ற பல நிகழ்வுகள் பற்றி நாம் அறியவந்துள்ளோம்.
சட்டமும் ஒழுங்கும் மாகாணசபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும். மேலும் போதைப் பொருள் பாவனைக்கும் மகளிர் மீதான குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கும் இடையில் இருக்குந் தொடர்பை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து உடனடியாக ஆவன செய்ய வேண்டிய ஒரு பொறுப்பில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.
இன்று காலை திருகோணமலை மாவட்டப் பெண்கள் வலையமைப்பு என்ற பெண்கள் அமைப்பு நாடளாவிய ரீதியில் பெண்களுக்கெதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் பற்றி ஒரு ஆவணத்தை என்னிடம் எனது அலுவலகத்தில் கையளித்தார்கள். இதுவரை வந்துள்ள பல பாரதூரமான குற்றங்கள் பற்றி அதில் பிரஸ்தாபித்துள்ளார்கள். பல கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவற்றைப் பற்றி நாம் அரசாங்கத்துடனும் பொலிசாருடனும் கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கலாம். விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம். கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் இதனைக் கருத்தில் எடுப்பார் என்று நம்புகின்றேன்.
எனவே எமது 2016க்கான வேலைத் திட்டமாக வன்முறைகளில் இருந்து மகளிர் பாதுகாக்கப்பட வேண்டியதை ஒரு கடப்பாடாக நாம் ஏற்றுக் கொள்வோம். குடும்பத் தலைமைத்துவத்தைச் சுமையாகக் கருதாது தமது கடமையாக முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவ நிலைக்கு பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாற்றி அமைத்தல் அத்தியாவசியமாகின்றது. அதனால்த்தான் ‘நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள்’ என்று இன்றைய கருப்பொருள் அநை;துள்ளது. வலுவான பெண்களே வளமான எதிர்காலத்திற்கு வித்திடக் கூடியவர்கள்.
முன்னாள்ப் பெண் போராளிகள் தொடர்பாகவும் நாம் விஷேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இன விடுதலைக்காக தமது வாழ் நாளையே அர்ப்பணஞ் செய்த போராளிகளின் எதிர்கால சுபீட்சத்திற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து எனது இச் சிற்றுரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
நன்றி. வணக்கம்
நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com