தேர்தல் பிரசாரத்தின்போது தனிநபரை விமர்சிப்பதையும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள், நடத்தை விதிகளின் அமலாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தில்லியில் சனிக்கிழமை ஏற்பாடு செய்தது.
தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்பட ஆறு தேசிய கட்சிகளும் 49 மாநில கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து எம்.தம்பிதுரை (அதிமுக), டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), ஆர்.வேலு (பாமக), தக்ஷிணாமூர்த்தி (தேமுதிக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின்போது, தேர்தல் ஆணையம் உத்தேசித்து வரும் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகையை உயர்த்தும் யோசனைக்கு கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன.
இதேபோல, அரசுக்குச் சொந்தமான இடங்கள், விடுதிகள் போன்றவற்றில் இருந்து செயல்படும் கட்சிகள், வேட்பாளர்கள் ஆகியோர், "அரசு சேவைகளான மின்சாரம், குடிநீர், தொலைபேசி, வங்கிக் கடன் உள்பட எவ்வித கட்டணத்தையும் நிலுவையும் வைத்திருக்கவில்லை' என்ற சான்றிதழை பெறுவது கட்டாயம் என்ற ஆணையத்தின் கெடுபிடி அறிவிப்புக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
டோட்டலைசர் இயந்திரம்: வாக்களிப்பின் ரகசியத்தை காக்க ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ள "டோட்டலைசர்' இயந்திரம் மூலம் வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குகள் ஒருசேர கலவையாக்கப்பட்டு எண்ணப்படும் என்ற ஆணையத்தின் யோசனை தொடர்பாகவும் பல்வேறு கட்சிகள் தரப்பில் வரவேற்பும், சந்தேகங்களும் தெரிவிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துகள் வருமாறு:
எம்.தம்பிதுரை (அதிமுக): தேர்தல் பிரசாரத்தின்போது தனிநபரை தாக்கிப் பேசுவதை தடுக்க வேண்டும் என்ற ஆணையத்தின் யோசனையை அதிமுக வரவேற்கிறது. "டோட்டலைஸர்' இயந்திரம் மீதான நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக): வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாக பரவக்கூடிய பிரசாரங்களை எவ்வாறு தடுப்பது? குடும்ப அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் வாக்காளர்கள் வாக்குரிமை செலுத்த அனுமதிக்க வேண்டும்.
டி.ராஜா (சிபிஐ): "டோட்டலைசர்' செயல்பாட்டை வரவேற்கிறோம். வேட்பாளர்களின் கணக்குகளை இணையத்தில் வெளியிடுவதைக் கட்டாயமாக்கக்கூடாது.
ஆர்.வேலு (பாமக): வாக்குப்பதிவுக்கு முந்தைய பிரசாரம் முடிப்பதற்கான 48 மணி நேரம் என்ற கால வரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும். தேர்தல் செலவுகளை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
தக்ஷிணாமூர்த்தி (தேமுதிக): சட்டப்பேரவைத் தேர்தல் அதிகாரிகளை மாநில அரசு நியமிக்கும் நடைமுறைக்குப் பதிலாக தேர்தல் ஆணையமே நேரடியாக தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் நேர்மையாக நடைபெற வழிபிறக்கும்.
தமிழகத்துக்கு தேர்தல் ஆணையர்கள் வருகை
தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட தமிழகத்துக்கு விரைவில் வரவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் நஸீம் ஜைதி கூறியதாவது: தமிழகத்துக்கு பாதுகாப்புப் படைகள் கூடுதலாக அனுப்புவது தொடர்பாக ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நானும் தேர்தல் ஆணையர்களும் விரைவில் தமிழகம் செல்லத் திட்டமிட்டுள்ளோம் என்றார் நஸீம் ஜைதி
0 comments:
Post a Comment