யாழ்.மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் எதிர்வரும் மூன்று மாதங்களிற்குள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் யாழ், உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள நடேஸ்வரா கல்லூரியை கையளித்து மக்கள் முன்பாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில்
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது :-
‘
முப்பது வருடகாலமாக கஸ்டப்பட்ட எமது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 65 ஆயிரம் வீட்டு திட்டத்தை பார்வையிடவும், காணிகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு காணிகளை வழங்குவதற்காகவுமே நான் இங்கு வருகை தந்துள்ளேன்.
கடந்த கால யுத்தத்தின் காரணமாக வடக்கு மக்கள் மிகவும் துன்பப்பட்ட ஒரு வாழ்வை நடாத்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த பகுதி மிகவும் உஷ்ணமான பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஆனாலும் கஷ்டப்பட்டு சிறந்த விளைச்சலை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களையும் ஒரே மாதிரி அபிவிருத்தி செய்யவே நாங்கள் திட்டமிட்டுள்ளோம், எனினும் வடக்கு மாகாணம் இருபத்தி ஆறு வருட கால போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதனால் ஏனைய மாகாணங்களை விட வடக்கில் அபிவிருத்தி என்பது குறைவானதாகவே இருக்கின்றது.
போரினால் மக்களின் உயிர்கள் இழக்கப்பட்டது மட்டுமல்லாது, ஏழ்மையும் அதிகரித்துள்ளது. யுத்தத்தினால் வடக்கு மாத்திரமல்ல நாட்டின் ஏனைய மாகாணங்கலும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன. ஆகையால் யுத்தத்தின் மோசமான விளைவுகளை அனைத்து மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். எனினும் நாங்கள் வடக்கு மீது அதிக கரிசனை கொண்டுள்ளோம்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க தீர்மானித்து உள்ளோம். குறித்த வீடுகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கருத்தையும், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தனது கருத்தையும் கூறியுள்ளனர். இவர்களோ அல்லது நானோ அந்த வீடுகளில் குடியேறப் போவதில்லை. ஆகயால் மக்கள் எதனை விரும்புகின்றனரோ அதனை தான் நாம் செய்ய முடியும்.
எதிர்வரும் நாட்களில் இந்த வீடமைப்பு தொடர்பில் மக்களது கருத்துக்களை அறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்துள்ள மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட மக்கள். அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
இவர்கள் வேறு யாருடைய காணியையும் தருமாறு கேட்கவில்லை. தமது சொந்த காணிகளை தருமாறு தான் கேட்கின்றார்கள். ஆகையால் இவர்களது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
எதிர்வரும் சில மாதங்களிற்குள் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, மக்களின் காணிகள் அனைத்தும் வழங்கப்படும் என நான் உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறிதியை நிறைவேற்ற மூன்று மாதங்கள் உள்ளன. அதற்கிடையில் மக்களது காணிகளை கையளிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் நான் கோருகின்றேன்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் எமது நாட்டிற்கு வந்து எம்மை சந்தித்த போது, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறும், மக்களது காணிகளை மீள வழங்குமாறும் கூறினார். அந்த வகையில் இந்த மீள்குடியேற்றம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாங்கள் மக்களுக்கு காணிகளை மீள வழங்கும் போது தென்னிலங்கையில் பிழையான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு வந்து கஷ்டப்படும் மக்களை பார்க்குமாறு நான் விமர்சனம் செய்பவர்களுக்கு கேட்டுக் கொள்கின்றேன். தற்போது நல்லிணக்கம் பற்றி பேசப்படுகின்றது. இது தென்னிலங்கை மக்களுக்கு தான் புரிய வைக்கப்பட வேண்டும்.
எல்லோருக்கும் அவர்களுக்குரிய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படல் வேண்டும். சமத்துவமாக அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டினை உருவாக்க வேண்டும். விமர்சனம், எதிர்ப்பு, கருத்து ஆகியன இலகுவில் சொல்லிவிட முடியும். ஆனால் பொறுப்பு பற்றி எல்லோராலும் சிந்திக்க முடியாது. வடக்கு மாகாண முதலமைச்சர் கூரியதனையும் செவிமடுத்தேன். மக்களின் விருப்பம் அறிந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment