போரின் போது இருந்த ஒருவர், போர் முடிவடைந்த பொழுதும் இருந்திருக்கின்றார், போர் முனையில் அவர் கொல்லப்படவில்லை என்ற விடயத்தினை போரை நடாத்திய தளபதி சொல்லியிருக்கின்றார் என்றால் எதிர்த்தரப்பில் போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களுக்கு என்ன நடந்தது? என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்;.
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு உரையாற்றினார்.
இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாடசாலை வெளிக்களச் செயற்பாடுகளுடன் சேர்த்து மாணவர்கள் கல்வியிலும் எப்போது ஆர்வம் காட்ட தொடங்குகின்றார்களோ அப்போது தான் அதன் உச்ச பயனைப் பெற முடியும். ஒவ்வொரு வருடமும் புள்ளி விபரங்களையெல்லாம் பரிசீலித்து எவ்வெவ்வாறான உத்திகளையெல்லாம் கையாண்டு எமது மாணவர்களை மேல் நோக்கிக் கொண்டு வரலாம் என எமது கல்வி உயர் அதிகாரிகள் பரிசீலித்து அதனை அதிபர்களுக்கு சமர்ப்பிக்கின்றார்கள்.
அதிபர்கள் அதனை ஆசிரியர்கள் மூலம் செயற்படுத்த முனைகின்றார்கள். இவ்வாறெல்லாம் திட்டமிடுகின்ற போது செயற்படுகின்ற போது இதனை மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்றால் இதனுடைய பெறுமதியை மாணவர்கள் அறிந்து கொள்ளவில்லை என்றால், இந்தக் கல்வியை மூளையில் வைப்புச் செய்யவில்லை, சேகரிக்கவில்லை என்றால் அதன் அதியுச்ச பலாபலனைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.
பாடங்களை மாணவர்கள் மூளையில் சேகரிப்பதற்கான உத்திகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கே உரிய கைங்கரியம். மாணவர்கள் என்ன என்ன உத்திகளைக் கையாள முடியும் என்பதை மாணவர்கள் பாடங்களுடன் ஒன்றித்து பழகுவதன் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். கடமையைச் செய் எனும் தத்துவத்தின் அடிப்படையில் மாணவர்கள் ஒவ்வொருவரினதும் கல்விக் கடமைகளை அவர்கள் சரிவர ஆற்ற வேண்டும்.
எமது நாட்டின் அரசியல் நிலை பற்றியும் எமது மாணவர்கள் அறிந்து செயற்பட வேண்டும். இன்றைய செய்தித் தாளில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் பல விடயங்களைப் புடம்போட்டுக் காட்டியிருக்கின்றது.
இவருடைய கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவாதத்தினைப் பெற்று தற்போதைய அரசு போர்க்குற்றம் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இக் கருத்தே போர்க்குற்றம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது என்பதற்கு சான்றாக இருக்கின்றது.
போரின் போது இருந்த ஒருவர் போர் முடிவடைந்த பொழுதும் இருந்திருக்கின்றார் போர் முனையில் அவர் கொல்லப்படவில்லை என்ற விடயத்தினை போரை நடாத்திய தளபதி சொல்லியிருக்கின்றார் என்றால் எதிர்த்தரப்பில் போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களுக்கு என்ன நடந்தது? போரின் பின்னே அவர் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தால் அது போர்க்குற்றம்.
எனவே போர்க்குற்றம் தான் இங்கு நடைபெற்றது என்பதற்கு மிகப்பெரிய சான்று இப்போது கிடைத்திருக்கின்றது. அது மட்டுமல்ல இந்த உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும் என்றால் வெளிநாட்டு நிபுனர்களின் உதவி பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இதனை என்றுமே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தப் போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நிபுனர்களுடைய உதவி பெறப்பட வேண்டும் என்று நாங்கள் சொன்ன போது தட்டிக்கழித்தவர்கள் இப்போது என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எனவே நடைபெற்றது போர்க்குற்றம், இதனை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நிபுனர்களின் உதவி தேவை என்று எம்மால் கூறப்பட்ட விடயம் தற்போது மிக முக்கியமான ஒருவரால் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. அவரின் பாராளுமன்ற உரை இந்த நாட்டு அரசியலில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment