முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் போன்றவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதானால், அவை முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து வரவேண்டுமே தவிர, அவற்றில் வெளியாரின் தலையீடு இருக்க கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசியலமைப்பாக்கம் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்ட நிபுணர்களும் பங்குபற்றிய முக்கிய கருத்தரங்கொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர எழுப்பிய கேள்வியொன்றுக்கு விளக்கமளிக்கையிலே அமைச்சர் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றம் – அரசியலமைப்பாக்கம் தொடர்பான முழுநாள் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை (29) பத்தரமுல்லை, வேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமெரிக்க தூதுவர் அடுல் கெஷாப், சட்டவல்லுனர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
அதன்போது, கருத்து தெரிவித்த ஹிருனிகா பிரேமசந்திர எம்.பி. முஸ்லிம்களின் சட்டப்படி 12 வயதிற்கு கீழ்பட்ட பெண் பிள்ளைகளும், 14 வயதிற்கு கீழ்பட்ட ஆண் பிள்ளைகளும் திருமண செய்து கொள்வதாகவும், உத்தேச புதிய அரசியலமைப்பின் போது இவ்வாறு நடக்காமல் இது பற்றியும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார். அப்பொழுது ஒருவர் குறுக்கிட்டு கண்டிய சட்டம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், குற்றவியல் சட்டத்தின் படி 18 வயதிற்கு கீழ்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஹிருனிகா எம்.பி. சுட்டிக்காட்டியதோடு, தாம் எவரையும் நிந்திப்பதற்காக இதனைக் கூறவில்லை என்றும் முஸ்லிம்கள் தரப்பில் ஒருவர் இது பற்றி தெளிவுபடுத்த முடியுமா என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கமளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மவ்சூப் தலைமையில் இது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு குழுவை நியமித்திருந்ததாகவும், அக்குழுவினர் விரிவாக அதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்ததோடு, முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதானால், அவ்வாறான திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தே வரவேண்டுமெனவும், அவற்றில் வெளியாரின் தலையீடு அறவே இருக்கக் கூடாதென்றும் உறுதியாக தெரிவித்தார்.
இளவயது திருமணங்களை பொறுத்தவரை இலங்கையில் அவை மிகவும் அரிதாகவே நடைபெறுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்
0 comments:
Post a Comment