யுத்தத்தின் போது இறுதிவரை வன்னியில் இருந்த ஒளிப்பட ஊடகவியலாளர் அமரதாஸ் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் துயரங்களையும் வெளியுலகத்திற்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர். சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய அவர் இறுதி யுத்தத்தின் ஒரு சாட்சியாகவும் திகழ்கிறார். கவிஞராக ஓவியராக சிறுகதை எழுத்தாளராக பல துறைகளில் தடம் பதித்தாலும் ஒளிப்பட ஊடகத்துறையிலேயே அதிக கவனம் செலுத்தினார். இறுதி யுத்தத்தில் காயமடைந்த அமரதாஸ் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். அவர் வழங்கிய விசேட செவ்வி.
கேள்வி கவிஞராக ஓவியராக அறிமுகமான நீங்கள் எவ்வாறு ஒளிப்பட ஊடகத்துறைக்குள் பிரவேசித்தீர்கள்.
பதில் சிறுவயதிலிருந்தே வரைதலில் ஆர்வம் இருந்தது. அதன் பின்னர் பத்திரிக்கைகளுக்கு காட்டூன் வரைந்தேன். நான் பிறந்ததே சிங்கள தமிழ் இனமுரண்பாடும் யுத்தமும் ஆரம்பித்த காலத்தில் தான். அலைச்சல் மிக்க இச்சூழலில் ஓவியத்துறையில் ஆழமாக ஈடுபட முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக ஒளிப்படத்துறைக்கு வந்தேன். கமராவுக்குள்ளால் பல காட்சிகளை பதிவு செய்தேன். என்னுடைய உணர்வுகளை மட்டுமல்ல மக்களின் உணர்வுகளையும் அதன் ஊடாக பதிவு செய்தேன்.
கேள்வி ஓவியத்துறையாக இருக்கட்டும், அல்லது ஒளிப்படதுறையாக இருக்கட்டும். உங்களின் மையக்கரு எதுவாக இருந்தது?
பதில் ஆரம்பத்தில் இயற்கையை வரைந்தேன். பின்னர் கருத்து வெளிப்பாட்டையும் மக்களின் உணர்வுகளையும் பதிவு செய்தேன்.
கேள்வி ஓவியத்துறை என்றவுடன் யாழ்ப்பாண சூழலில் மார்க் மாஸ்ரரை யாரும் மறந்து விட முடியாது. ஓவியத்துறையில் உங்களை ஈர்த்தவர் யார்?
பதில் ஓவியர் மார்க் அவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. குருநகரில் அவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். யுத்த சூழலில் ஓவியத்துறையில் அதிக ஈடுபாடு காட்ட முடியாமல் போனமை கவலைதான். என்னுடைய தேடல்களும் பயணங்களும் வேறு வேறாகத்தான் நிகழ்ந்திருக்கிறது.
ஓவியத்துறையில் இருந்து கொண்டு செய்ய முடியாததை வேறு வழியில் செய்ய முயற்சித்தேன். அந்த வகையில் தான் எனக்கு ஒளிப்படத்துறை சாத்தியமானது.
கமரா என்பது தமிழ்சூழலில் வெறுமனே சம்பவங்களை பதிவு செய்வதற்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். நான் ஆரம்பத்தில் சமூக மட்ட நிகழ்வுகளை பதிவு செய்து வந்தேன். பின்னர் யுத்தகால நிகழ்வுகளையும் பதிவு செய்ய ஆரம்பித்தேன். யுத்த சூழலில் சமூக வாழ்க்கை, இயற்கைகாட்சிகள், அவலங்கள், என பலவற்றையும் பதிவு செய்தேன். யுத்தத்தின் பிரதிபலிப்புக்கள் முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் வன்னியில் எல்லைகளில் நடந்து கொண்டுதான் இருந்தது. எல்லைகளில் நடந்த யுத்தம் வன்னிக்குள்ளும் பிரதிபலித்தது. அது மரணங்களாக இழப்புக்களாக ஹெல் தாக்குதல்கள் விமான குண்டுத்தாக்குதல்கள் என பல வடிவங்களில் பிரதிபலித்தது. இவை அனைத்தையும் பதிவு செய்தேன்.
கேள்வி யுத்த சூழலில் உங்கள் ஆக்கங்களை ஒளிப்படங்களை வெளிஉலகிற்கு கொண்டு செல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டதுண்டா?
பதில் வன்னியில் ஒளிப்பட கண்காட்சியை நடத்தியிருக்கிறேன். வாழும் கணங்கள் என்ற நூல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறேன். அதற்காக வன்னிச்சூழலில் பல சிரமங்களை எதிர்நோக்கினேன். கடைசி யுத்த காலத்தில் நான் எடுத்த பல படங்களை இழந்திருக்கிறேன். ஆனாலும் முடிந்தவரை இறுதி யுத்தத்தில் நான் எடுத்த ஒளிப்படங்களை காப்பாற்றி கொண்டுவர முடிந்திருக்கிறது.
கேள்வி இறுதி யுத்தகாலத்தில் மக்கள் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த போது உங்களால் தொடர்ந்தும் சுயதீனமான ஒளிப்பட ஊடகவியலாளராக பணியாற்றும் போது நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் எவை?
பதில் நிறைய சவால்களை எதிர்நோக்கினேன். நான் கிளிநொச்சியிலிருந்து விஸ்வமடுவுக்கு சென்று இடப்பெயர்வுகளை பதிவு செய்து விட்டு கிளிநொச்சி வந்தபோது கிளிநொச்சியில் மக்கள் இடம்பெயர்ந்து நகரம் வெறுமையாக காட்சியளித்தது. மக்கள் இடம்பெயர்ந்த பின்னரும் அங்கு ஊடுருவிச் சென்று அதனை பதிவு செய்தேன். வெட்டையாக இருந்த எமது கிராம வெளிகளில் நின்று கண்ணீர் வடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றையும் வெளியில் கொண்டுவர முடியவில்லையே என்ற ஏக்கம் அப்போது இருந்தது.
கேள்வி கிளிநொச்சியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறியதை சுயாதீனமான ஊடகவியலாளர் என்ற ரீதியில் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறியதை மக்கள் விரும்பவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் இருக்க வேண்டிய தேவை இருந்தது. அவர்கள் வெளியேறியிருக்க கூடாது. அது ஒருவகை பின்னடைவுதான். சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் வெளியேற்றம் இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்திருந்தது. ஆனால் அவர்கள் உள்ளே இருந்தாலும் யுத்தம் இப்படித்தான் போய் முடிந்திருக்கும். இறுதி யுத்தம் தொடர்பில் பல விடயங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது. யுத்தம் புரிந்தவர்கள் மக்களை கணக்கில் எடுக்கவில்லை. மக்கள் பாரிய அழிவை சந்திப்பார்கள் என அறிந்திருந்தும் இலங்கை அரசு அதனை கவனத்தில் எடுக்கவில்லை. மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை, புலிகள் அழிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசும் சர்வதேசமும் விரும்பியது. சர்வதேச வலைப்பின்னல் அவ்வாறுதான் அமைக்கப்பட்டிருந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளியேற்றம் என்பது சாட்சியற்ற யுத்தம் ஒன்றை நடத்த மிக இலகுவாக அமைந்து விட்டது.
ஆனால் கடைசி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியில் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. யுத்தத்தை சர்தேசம் சற்லைற் வசதி மூலம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இறுதி யுத்தம் என்பது உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்க நடந்த ஒரு சம்பவம் தான்.
கேள்வி இறுதி யுத்தத்தின் போது எங்கு மக்களும் விடுதலைப்புலிகளும் செல்ல வேண்டும் என்பதை அரசாங்கம் தான் தீர்மானித்தது. முள்ளிவாய்க்காலை கூட அரசாங்கம் தான் தெரிவு செய்தது. அரசாங்கம் தெரிவு செய்ய இடத்தை நோக்கி மக்களும் விடுதலைப்புலிகளும் ஏன் நகர்ந்தார்கள்?
பதில் பாதுகாப்பு வலயம் என அரசாங்கம் அறிவித்த இடங்களை நோக்கித்தான் செல்ல வேண்டி இருந்தது. வேறு வழியில்லை. விடுதலைப்புலிகள் எல்லைகளில் நின்று சண்டை செய்தார்கள். அவர்கள் யுத்த உபகரணங்களை நகர்த்த வேண்டிய தேவை இருந்தது. இராணுவத்தினர் கண்மண் தெரியாத அளவிற்கு எறிகணை மற்றும் விமான தாக்குதல்களை நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் மரபுவழி யுத்தத்தில் வளர்ச்சியடைந்திருந்தார்கள். அதையே நம்பியிருந்தார்கள். ஆனால் யுத்தம் தீவிரமடைந்து முள்ளிவாய்க்காலை நெருங்கிய போது மரபுவழி யுத்தத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மக்கள் நெருக்கமாக இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு மரபு வழி யுத்தத்தை நடத்த முடியாது. இறுதிக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் பெருமளவில் வலிந்து தாக்குதல்களை செய்யவில்லை. தற்காப்பு தாக்குதல்களைத்தான் செய்தார்கள். தாக்கும் இராணுவத்தை தடுப்பது பின்வாங்குவது நிலைகளை தக்க வைத்து கொள்வது என இப்படித்தான் யுத்தம் காணப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்களுடன் சேர்ந்து பின்னுக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அரச தரப்பு விரும்பிய இடத்தை நோக்கி தள்ளிச்சென்றதாகத்தான் கருத முடியும். இந்த யுத்தத்தை வேறு திசைக்கு கொண்டு போக நினைத்திருந்தால் கிளிநொச்சி வீழ்வதற்கு முதலே யுத்தத்தின் போக்கை விடுதலைப்புலிகள் மாற்றியிருக்க வேண்டும். விடுதலைப்புலிகள் விஸ்வமடு நோக்கி சென்று அங்கியிருந்து மாத்தளன் செல்கிறார்கள் என்றவுடன் அது பொறிக்குள் போன நிலைத்தான் காணப்பட்டது.
ஆனால் முள்ளிவாய்க்காலை நோக்கி விடுதலைப்புலிகள் சென்றதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம். கடற்புலிகள் பலமான கட்டமைப்பாக இருந்தார்கள். தளபாடங்களையும் கடற்புலிகளின் தளங்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. இதனால் அவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி சென்றிருக்கலாம்.
கேள்வி யுத்த காலத்தில் அங்கு அரச படைகள், விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என மூன்று தரப்பு இருந்தார்கள். அவர்களில் உங்கள் கமரா யாரை நோக்கி சென்றது?
பதில் என்னுடைய குவியம் பார்வை எல்லாம் மக்கள் மீதுதான் இருந்தது. இராணுவத்தினருக்கு படப்பிடிப்பு குழுவினர் இருந்தனர். அது போல விடுதலைப்புலிகளுக்கும் இருந்தனர். நான் மக்கள் மத்தியில் இருந்து அம்மக்களின் இழப்புக்கள் அவலங்களை பதிவு செய்தேன். எங்கு ஒரு சம்பவம் நடந்ததாலும் அதனை பதிவு செய்தேன்.
ஷெல்தாக்குதல்களில் உடல்சிதறி பலியான சடலங்களை படம் எடுத்தேன். மக்கள் என்னை திட்டினார்கள். இந்த நேரத்தில் இதைஎல்லாம் எடுத்து என்ன பிரயோசம் என கூறினார்கள். யாரும் மக்களை காப்பாற்றவில்லை என்ற ஆதங்கம் இறுதி கட்டத்தில் மக்கள் மத்தியில் காணப்பட்டது. மக்களின் எல்லா வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்தேன்.
கேள்வி இறுதி யுத்தத்தில் உங்களை பாதித்த சம்பவம் எது?
பதில் ஒரு சம்பவம் என சொல்ல முடியாது. பல சம்பவங்கள் இருக்கின்றன. இரணைப்பாலையில் இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகையில் இருந்த தாயும் மகனும் ஷெல் தாக்குதல்களில் உடல் சிதறி அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து போனார்கள். அந்த சம்பவத்தையும் அவர்களின் புகைப்படங்களையும் பதிவு செய்தேன். புடவை கடை வைத்திருந்த குடும்பதலைவர் மட்டும் தப்பியிருந்தார். அவரும் பின்னர் மனநோயால் இறந்து போனார். அந்த குடும்பத்தின் இழப்பை சொல்ல இன்று யாரும் இல்லை. அந்த சம்பவம் பற்றிய என்னுடைய புகைப்படங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இவர்களுக்கு நடந்த துயரத்தை வெளியில் கொண்டுவருவது யார்?
கேள்வி இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதற்கு சர்வதேச சட்டங்களின் படி போதிய ஆதாரங்கள் இல்லை என சிலர் கூறுகிறார்கள்.
நீங்கள் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது இருந்தவர்கள் என்ற வகையில் இனப்படுகொலை என்பதற்கு ஆதாரம் இல்லை என சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில் அது இனப்படுகொலை தான் என்பதை ஒற்றைப்படை தன்மையில் நான் பேசமுன்வரவில்லை. பல்வேறு ஆதாரங்கள் தரவுகள் இருக்கின்றன. தமிழ் இனத்தின் ஒரு பிரதிநிதியாகவும் சுயாதீனமான ஊடகவியலாளனாகவும் இருந்து சம்பவங்களை பதிவு செய்திருக்கிறேன். அண்மையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் நான் யுத்தகால அனுபவம் தொடர்பாக பேசினேன். அப்போது ஐரோப்பிய பெண் ஒருவர் கேட்டார். இவ்வளவு இழப்புக்கள் நடந்திருக்கிறது, இவ்வளவு விடயங்கள் ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறது. இதை இனப்படுகொலை என சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும் என கேட்டார். பொதுப்பார்வையில் பார்க்கும் போதே நடந்தவைகள் இனப்படுகொலைதான் என தெரிகிறது. ஆனால் இருக்கின்ற சர்வதேச சட்டங்களுக்கு அமைய இது இனப்படுகொலைதான் என நிரூபிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. சான்றாதாரங்கள் மூலம் நிரூபிக்க வேண்டியது அவசியம் தான்.
இனமுரண்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் யுத்தம் நடைபெற்றது. தமிழ் இனம் என்ற காரணத்தினால் அவர்கள் மீது யுத்தம் நடத்தப்பட்டது. எல்லைகளில் மட்டும் விடுதலைப்புலிகளுடன் மட்டும் யுத்தம் நடக்கவில்லை. மக்கள் வாழ்ந்த பகுதிகளை நோக்கி ஸ்ரீலங்கா படையினர் தாக்கியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. மக்கள் பெருமளவு கொல்லப்பட்டார்கள்.
அதற்கு மேலாக தமிழ் மக்களின் கண்ணியம் குலைக்கப்பட்டிருக்கிறது. கண்ணியமான வாழ்வு, கலாச்சார வாழ்வியல் அனைத்தும் அழிக்கப்பட்டது. அது கூட இனப்படுகொலைதான். தமிழ் மக்களின் அனைத்து வாழ்வியலையும் புரட்டி போட்ட சம்பவமாகத்தான் இறுதி யுத்தத்தை நான் பார்க்கிறேன். மக்களின் கண்ணியக்குலைப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது.
சர்வதேச சட்டத்திற்கு அமைவாக அதனை நிரூபிக்க வேண்டுமாக இருந்தாலும் அதனை நிரூபிக்க முடியும். உலக நாடுகள் சேர்ந்து தான் ஐ.நா உட்பட சர்வதேச நிறுவனங்களையும் சட்டங்களையும் உருவாக்கி இருக்கின்றன. உலகில் பல அழிவுகளையும் யுத்தங்களையும் நடத்துவதும் இந்த உலக நாடுகளின் அரசுகள் தான். இந்நிலையில் எப்படி இவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியும்? இங்கு சர்வதேச சட்டங்களின் போதாமையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
நாஷிகளின் இனப்படுகொலை பற்றி இப்போதும் பேசுகிறார்கள். எனவே என்றோ ஒரு நாள் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பது உலகம் உணர்ந்து கொள்ளும்.
ஆனால் வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் நடந்தவைகளை யுத்த குற்றம் என சுருக்க பார்க்கிறார்கள். யுத்தகுற்றம் வேறு. இனப்படுகொலை குற்றம் வேறு. போர்க்குற்றம் என கூறி போரில் ஈடுபட்ட சிலருக்கு தண்டனையை வழங்கி விட்டு அதனை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஆனால் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளும் போதுதான் அந்த இனத்திற்கு நீதியும் தீர்வும் கிடைக்கும். இனஅழிப்புக்கு உள்ளான இனத்திற்கு பரிகாரம் வழங்க முடியும். அழித்த இனத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை இதன் மூலம் நிரூபிக்க முடியும்.
கேள்வி ஐ.நா உட்பட சர்வதேசம் ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா?
பதில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது அனைத்தும் மழுப்பலான போக்கே காணப்படுகிறது. தமிழ் மக்கள் பாதுகாப்பாக கண்ணியமாக வாழக் கூடிய தீர்வு தேவை. தமிழ் அரசியல் தலைவர்கள் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. தமிழர் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
அந்தந்த நாடுகளில் உள்ள கொள்கைவகுப்பாளர்கள் இராஜதந்திரிக்கள் மட்டத்தில் மாற்றம் ஏற்படும் வகையில் வேலை செய்ய வேண்டும். வெறுமனே ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டங்களுக்கு வந்து போவதால் எதனையும் சாதிக்க முடியாது.
( இரா.துரைரத்தினம் )
0 comments:
Post a Comment