தமிழ் மக்களுக்கு என்ன தீர்வைத்தான் சொல்கிறது ஜே.வி.பி?

xgfjgkஇலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான  தீர்வைக்கூட ஏற்க மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள் தீர்வை எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் சமஷ்டித் தீர்வையாவது முன்வைக்க வேண்டும் என்பதுதான் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணை.



தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைப் பிரச்சினையை தன்னுடைய இனவாத ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில்தான் எல்லாக் கட்சிகளைப் போலவும் ஜே.வி.பி நோக்குகிறது என்பதையும் இன்னும் அந்த நிலைப்பாட்டில்தான் அக்கட்சி இன்னமும் இருக்கிறது என்பதையும் இந்தக் கருத்து தெளிவுபடுத்துகிறது.



தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரசைகளாக நடாத்தி அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் இலங்கை ஆட்சி முறையை பாதுகாக்கும் அக் கட்சி, தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான சிறு முயற்சிகளையையே ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்க முயல்வது புதிய விடயமல்ல.



அண்மைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்வு உள்ளிட்ட விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது அக்கட்சி தமது அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுகிறது என்பதையும் தொடர்ந்தும் அக் கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுகிறது என்பதையும் புலப்படுத்துகிறது.



“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட விதத்தின் படி மீண்டும் ஆயுத போராட்டம் ஏற்படாது. நாம் பிரச்சினை ஏற்படுத்தாவிடின் மீண்டும் அத்தகைய நிலை உருவாகாது.“ (அக்டோபர் 24,2015 நாடாளுமன்றில் ஜெனீவா பிரேணை விவாத்தில்) இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஒருமுறை கூறினார்.



“13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரி வருவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டல்ல. இந்தியாவின் பொருளாதார நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கிலாகும். இன்று அதிகாரப் பகிர்வின் மூலம் நாட்டின் அரசியலில் தலையீடு செய்ய முயற்சிக்கின்றது. அதிகாரப் பகிர்வின் மூலம் சாதாரண பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது. தமிழ் இனவாத அரசியல்வாதிகள் தங்களது பதவியை தக்க வைத்துக்கொள்ள அதிகாரப் பகிர்வு குறித்து கோரி வருகின்றனர்.“ ஜூன் 04, 2014இல் லண்டனில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு கூறினார் அனுர குமார.



13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணி 2006ஆம் ஆண்டில் அந்த சட்டத்தையும் அதன்பால் இணைக்கப்பட்ட வடகிழக்கையும் பிரித்தவர்கள் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது எதற்காக? இனப்பிரச்சினை சார்ந்த முயற்சிகளை முறியடிப்பதன் ஊடாக இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை எனக் காட்ட ஜே.வி.பி முனைகிறது. தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான சிறு முயற்சிகளையும் எதிர்ப்பது தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் வழங்கிவிடக்கூடாது என்பதனாலா?



புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை குழப்ப மாட்டோம் என்றார் விஜித ஹேரத். ஆனால் எதனையும் மக்கள் விடுதலை முன்னணி குழப்பவே முனைகிறது. “புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கி விடு­வதன் மூலம் வடக்கில் உள்ள தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைத்து விடும் என்று எவரும் நினைக்க முடி­யாது. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்குத் தமிழ் மக்கள் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்துப் கொண்­டி­ருக்­கின்­றனர். அங்கு அவர்கள் நில உரிமை கோர­வில்லை. மாறாக தமக்கு நிலமே கோரு­கின்­றனர்.” 12.01.2015 அன்று பாராளுமன்றத்தில் அனுரகுமார இவ்வாறு குறிப்பிடுகிறார்.



ஆனால் புதிய அரசியல் அமைப்பு அவசியம் என்று கூறும் ஜே.வி.பி அதில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை கொடுக்கலாம் என்று குறிப்பிடலாம். இவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வு என்றதும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது இனவாத, கடும்போக்கன்றி வேறு எவ்வாறு அழைப்பது? தமிழர் நில உரிமையை தமிழ் தலைவர்களிடம் கையளிக்காதே என்பதன் ஊடாக அதை சிங்கள தலைவர்களின் கையில் வைத்திரு என்று கூறுகிறாரா?



தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அவர்களுக்கு தீர்வை கொடுக்காவிட்டால் மீண்டும் அவர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் எனத் தெரிவித்தார். பின்னர் 13ஆவது திருத்தம் தீர்வல்ல என்றார். பின்னர் புதிய அரசியல் அமைப்பிலும் தீர்வு தேவையில்லை என்கிறார். மகிந்த ராஜபக்ச போன்ற பேரினவாதிகளைப் போலவே தமிழ் மக்கள் விடயத்தில் ஜே.வி.பியும் தமது அரசியலுக்கும் அரசியல் சூழலுக்கும் ஏற்ப பேசுகின்றனர்.



சமஷ்டி முறை இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு சாத்தியமானது என்று கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரிவின் சில்வா . (27 ஜூலை 2015, http://bit.ly/1pIuBUq) “இன்றைக்கு சமஷ்டி ஆட்சிக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறிக்கொண்டு ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரத்தை பகிர முனைகின்றது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்ந்தாலும் எதிர்ப்போம். எப்படியான அதிகாரப் பகிர்வையும் எமது கட்சி எதிர்க்கும் அதிகாரப் பகிர்வால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது வேடிக்கை“ (http://bit.ly/1Ul33kH) என்று தெரிவித்திருக்கிறார்.



ஆனால் ரில்வின் சில்வாவின் இந்தக் கருத்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் வழங்க மாட்டோம் என்பதன் வெளிப்பாடே. மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச போன்ற கடும்போக்காளர்களுக்கும் ரிவின் சில்வா போன்ற ஜே.வி.பியினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை இக் கருத்துக்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.



வடக்கு மாகாண சபை பலவீனமாக உள்ளது என்றும் வடக்கிற்கு அதிகாரம் தேவையில்லை என்றும் அனுர கூறுகிறார். இலங்கை அரசு மீதான விமர்சனங்களுக்காக இலங்கை அரசே தேவையில்லை என்ற நிலைக்கு அனுர வருவாரா? ஆக தமிழ் மக்கள் சுயமான ஆட்சி ஒன்றில் ஈடுபடக்கூடாது என்ற காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட பேரினவாதச் சிந்தனை ஜே.வி.பியிடம் இன்னமும் அப்படியே இருக்கிறது என்பதுதான் இங்கு புலப்படுகிறது.



கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் கால இன அழிப்பு யுத்தம் மற்றும் அதற்கு முந்தைய கால யுத்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவைக் கொடுத்திருந்தனர். அத்துடன் சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து போரை தொடங்கிய புலிகளை அழியுங்கள் என்றும் அவர்கள் அப்போதைய அரசுகளை வலியுறுத்தினார்கள். அத்துடன் வடகிழக்கு மாகாணங்களை பிரிக்கும் வழக்கையும் தொடுத்தனர்.



இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக ஜே.வி.பி ஒரு பேரினவாதக் கட்சி என்ற பார்வையே அக் கட்சி மீது தமிழ் மக்களுக்கு உண்டு. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஜே.வி.பி வடகிழக்கில் அரசியல் செய்ய வந்துள்ளது. காணாமல் போனவர்களுக்காகவும் போரில் உருவான விதவைகளுக்காகவும் மீள்குடியேற்றத்திற்காகவும் அவர்கள் இப்போது பேசுகின்றனர்.



ஆனால் தாமும் ஆதரித்த யுத்தம் ஒன்றினால்தான் இவைகள் நிகழ்ந்தன என்பதையோ, யுத்தம் ஒன்று போராட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதையோ, இனப்பிரச்சினை காரணமாகவே யுத்தம் தோன்றியது என்பதையோ, தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது என்பதையோ, தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் செய்ய முனைகின்றனர்.



வடகிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜே.வி.பி குரல் கொடுக்கிறது. ஆனால் அந்த பாதிப்பை ஏற்படுத்திய யுத்தத்தை அவர்கள் ஆதரித்தவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடினார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளாத வரையில் தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கு உரிய தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வது கடினமே.



தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வில்லை ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று கூறிய ரில்வின் சில்வா இப்போது அதனையும் எதிர்ப்போம் என்று சொல்கிறார். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் இது. சிங்களத் தலைவர்கள் இவ்வாறு எல்லாத் தீர்வுகளையும் எதிர்க்கும் அனுபவங்களால்தான் அண்மையில் வடக்கில் நடைபெற்ற அரசியலமைப்பு கருத்தறிதல் அமர்வில் தமிழ் மக்கள் தமிழீழத்தை வலியுறுத்த வேண்டி வந்தது.




தீபச்செல்வன்



About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com