அமைச்சர் ரிசாத் பதியுதீன் வட பகுதியிலுள்ள பௌத்த பிக்குகளுக்கிடையில் பிளவுகளை உருவாக்கி தொடர்ந்தும் காடுகளை அழித்து முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவிவருகிறார்.
பிக்குகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக வவுனியாவில் பிக்குகளுக்கு இலவச வைத்திய முகாம் நடாத்தியுள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் ஊடக மாநாட்டிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிக்குகளுக்கான இலவச வைத்திய முகாம் ஏற்பாட்டினை சிங்கள ராவயவும், பொது பலசேனாவும் எதிர்த்திருந்தன.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தினரிடையே இன நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காகவே பிக்குகளுக்கென இலவச வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதில் மறைமுகமாக எந்த நோக்கமும் இல்லை. இதனை எதிர்க்கும் தேரர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் இது தொடர்பில் ‘விடிவெள்ளி’ யிடம் கருத்து வெளியிட்டார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பௌத்த பிக்குகளுக்கான இலவச வைத்திய முகாம் வவுனியாவில் சங்க போதி விகாரையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு பௌத்த சங்க சபையின் பிரதான தேரர் சியம்பல விமலசாரதேரர், உழுக்குளம் ஸ்ரீ கமாபதி சுமணதிலக தேரர், வெலிஓய திஸ்ஸ தேரர் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
யுத்தகாலத்திலும், தற்போதும் வவுனியாவில் உதவிபுரியும் ஒரே அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆவார். வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் உதவி செய்யவில்லை. மஹிந்தவின் காலத்தில் அமைச்சர் ரிசாத் நல்லவர் என்று கூறிய தேரர்கள் ஏன் இப்போது எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை என நிகழ்வில் தேரர்கள் கருத்து வெளியிட்டனர்.
சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் தெரிவித்ததாவது அமைச்சர் ரிசாத் பதியுதீன் வில்பத்து காடுகளை அழித்து தற்போது பொலநறுவை சோமாவதி புனித பூமிக்குரிய காடுகளை அழித்து முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அடிப்படைவாத முஸ்லிம்களைக் குடியேற்றும் ஏற்பாடே இதுவாகும். காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் ரிசாத் பதியுதீனை எதிர்க்கிறார்கள்.
இந்நிலையில் வடக்குப் பகுதி பிக்குகள் மத்தியில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி அவர்களை பிளவுபடுத்துவதே ரிசாத்தின் திட்டமாகும். இதற்காகவே அவர் பிக்குகளுக்கு இலவச வைத்திய முகாமை நடத்துகிறார்.
வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர், அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அனைவரும் தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களையே கவனிக்கிறார்கள். இவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமான பிரதிநிதிகளல்ல வடக்கு சிங்கள மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
சம்பந்தன் தமிழர்களுக்கு மட்டுமான எதிர்க்கட்சித்தலைவரல்லர். முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவராவார். சம்பந்தன் தனது பொறுப்பை உணர்ந்தும் செயற்பட வேண்டும்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் பௌத்த தேரர்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்துவதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment