பல்லாயிரம் போராட்ட வரலாறுகளையும் தொண்மைகளையும் கொண்ட பூமி பந்தில் வரலாற்றாலும், காலத்தாலும் அழித்து விட முடியாத தியாகங்களையும் சரித்திரங்களையும் தன்னகத்தே கொண்ட வரலாறு என்பது தமிழீழ போராட்டமும், விடுதலைப்புலிகளுமே. தனி மனித போராட்டம் தொடங்கி நாட்டு சுதந்திரம், இன சுதந்திரம் என பல போராட்டங்களை உலகு கண்டுள்ளது. ஆனால் அதனையும் தாண்டி உலக தமிழினத்தின் விடியலுக்காய், அவர்களின் உரிமைகளுக்காய் இன்றும் போராட்டம் ஓய்ந்த நிலையிலும் மிளிர்கிறது என்றால் புலிகளின் வரலாறே சான்று.
மக்களுக்காக மக்களோடு மக்களாக நின்று போராடியது விடுதலைப்புலிகளே.
விடுதலை போராட்டம் என்பது ஒரு தனிமனித சக்தியினால் உருவாகிடாது. அது இனத்தை அண்டியோ, நிலத்தை அண்டியோ, நாட்டினை அண்டியோ விரிவு படுத்தப்படும். ஆனால் பிரபாகரன் எனும் மிகப்பெரிய சக்தியால் உருவாக்கப்பட்டு உலகை திரும்பி பார்க்க வைத்த போராட்டம் என்பது தமிழர் மரபில் அரசன் ஆட்சி காலத்தில் கூட நடந்திருக்க வாய்ப்பில்லை. மிகச்சிறந்த ஆளுமை, நேரான பாதை, மக்களுக்கான தேவை உணர்தல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு இன வாத அரசுக்கெதிரான போராட்டத்தினை எம் பெரும் தலைவர் நடாத்தியிருந்தார்.
அதனால் தான் மக்களும் அதன் பின் ஈர்க்கப்பட்டு இளைஞர் யுவதிகளும் இப் போராட்ட நடவடிக்கைகளுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர். பல துரோகங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் என அனைத்தும் தொடர்ந்த வேளையில் கூட அனைத்தையும் இனம் கண்டு முளையிலேயே கிள்ளி எறிந்து போராட்டம் வெற்றிப்பாதையினை கொண்டு சென்றது. சிறந்த தலைமைத்துவம், நிர்வாகம் என அனைத்து கட்டமைப்புகளும் சிறப்புற எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என புலிக்கொடி தரணியெங்கும் கம்பீரமாய் காற்றில் ஆடியது.
ஒரு போர் வீரன் உண்மையாக தன்னை போராட்டத்தில் அர்ப்பணித்தான் எனில் அவன் உடலில் குருதி ஓட்டம் இருக்கும் வரை போராடியே மடிவான் அப்படி பட்ட வேட்கையை கொண்டது தான் புலிகளின் போராட்ட கோணமும், விடுதலை வேட்கையும். விடுதலை உணர்வை தனக்குள் விதைத்து அதை களத்தில் தீப்பொறியின் வடிவாக காட்டி போரின் வெற்றியாளனாகவோ, மாவீரனாகவோ அவனது பயணம் தொடர்கிறது. போராட்டத்தினை உற்று அவதானிக்க அவனிடம் நேரம் இருந்திருக்காது.
ஒவ்வொரு கணமும் அவனிடம் விடுதலை வேட்கை இருந்திருக்கும். அதனால் தான் ஒரு போராளியை பற்றி இன்னொரு போராளி வார்த்தைகளால் எழுத முடியாத வினாக்களாக இருந்தனர். தன்னை மறந்து தன் உறவு மறந்து மண்ணை மட்டுமே நேசித்து தலைவனின் கரம் பற்றி கொண்ட வீர சபதங்கள் என்றுமே அழியா வரலாறுகளே. கழுத்தில் நஞ்சு சுமந்து கரத்தினில் நெருப்பாயுதம் தரித்து முற்காடுகளுக்கு மத்தியிலே கொண்ட பயணங்கள் கூறும் ஆயிரம் வார்த்தைகள்.
மகனே எப்ப வருவாய் என தாயின் கேள்விக்கு சிரிப்பில் பதில் கூறுவான் எனக்கு நிலையேது என்று. ஒரு விடுதலை இயக்கம் கொண்டிருக்கும் பண்புகள் என்ன அவற்றின் கடப்பாடுகள் என்ன என அனைத்தும் சில உலக நாடுகள் விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறிகளில் இருந்து கற்றுக்கொண்டவை அதிகம் அப்படி ஒரு இறுக்கமான அமைப்பாக விடுதலை புலிகள் திகழ்ந்த காலங்களில் குற்றம் குற்றமாவே பார்க்கப்பட்டது. எதிரி எதிரியாகவே பார்க்கப்பட்டான்.அதனால் தான் தவறுகள் நடப்பது தடுக்கப்பட்டன.
விடுதலை வீரனை பார் அவன் வாழ்வின் பங்காளியாய் வேண்டாம் இன்றைய நிலையில் நேற்றைய காவலர்கள் இன்று உணவின்றி உறைவிடமின்றி தவிக்கின்றனர். அவர்கள் இன்றும் பாதை மாறி விட வில்லை. நாம் தான் கடந்த நிலை மறந்து திரும்பி பார்க்க மறுக்கிறோம். அவர்களின் தியாகங்களை ஒரு கணம் சிந்தியுங்கள் தமிழர்களே.
0 comments:
Post a Comment