யாழ் நாகவிகாரையினால் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் கட்டப்படவிருந்த புத்தர் சிலை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி வழங்கப்படாததால் நிறுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என்பது யாழ் நாகவிகாரை அதிபதிக்கு தெரிந்து இருக்க வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
பௌத்த விகாரையின் சிலை கட்டுமானம் தடை செய்யப்பட்டதானது, நாட்டின் இன மத சகவாழ்வுக்கு ஏற்பட்டுள்ள தடை என என்னிடம் முறையிட்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு நான் இது பற்றிய பதிலை தந்துள்ளேன்.
இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு சிங்கள ஊடகங்களில் இனவாதத்தை கிளப்பியவர்களுக்கும் பதில் கூறியுள்ளேன். இது சகவாழ்வுக்கான தடை இல்லை. நாட்டின் சட்டங்களை புரிந்துகொள்ளாமையினால் ஏற்பட்ட சட்ட தடை என கூறியுள்ளேன். இந்த கரையோர பாதுகாப்பு திணைக்களம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வருகிறது.
இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், விசேட வரம் பெற்றவர்களைபோல் நினைத்த நேரத்தில் சட்டங்களை மீறி எதுவும் செய்யலாம் என்ற நிலைமை மாறி இன்று சட்டத்தின் ஆட்சி இயன்ற அளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் பல்வேறு இந்து ஆலயங்களில் வானுயர்ந்த கோபுரங்கள் பல எழுப்பட்டுள்ளன. எனவே வடக்கிலும் விகாரைகளில் கட்டுமானங்கள் செய்யப்படலாம் என்பது இயற்கையே.
ஆனால், சட்டத்தை மீறி கடலிலும், வானிலும் கட்டுமானங்களை நினைத்தபடி எவரும் செய்ய முடியாது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே யாழ் அரச அதிபர் வேதநாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே சட்டத்தை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை சிங்கள ஊடகங்களில் குறை கூறுவது பிழையானதாகும்.
0 comments:
Post a Comment