யுத்தம் முற்றுப்பெற்றதிலிருந்து இன்றுவரையில் இருபத்தைந்து தடவைகளுக்கும் அதிகமாக யாழில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே சாவகச்சேரியில் கிடைக்கப்பெற்ற தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் அவ்வாறு மீட்கப்பட்டவையேயாகும் என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென காண்பிக்க தெற்கின் இனவாதிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறுதி யுத்தத்தில் மக்களின் இருப்பிடங்கள் கைப்பற்றப்பட்டமை காணாமல்போனோர் விவகாரம் போன்றவையில் புலிகளுக்கும் புலிகள் அல்லாத வேறு குழுக்களுக்கும் தொடர்புள்ளது. எனவே இந்த விடயத்தில் இராணுவத்தினரைமாத்திரம் காரணம் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள வடக்கு ஆளுனரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் குறிப்பிடத்தக்க மட்டத்தில் சகவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இனவாதிகளால் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
யுத்ததத்தை வென்றதை விடவும் கடினமான விடயம் மக்கள் மனங்களை வெல்வதேயாகும். அந்த இலக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடைந்துள்ளார். அதிகம் மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்ட தலைவர் என்றும் அவரையே குறிப்பிட முடியும்.
அரசாங்கம் இவ்வாறான கோணங்களில் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத இனவாத சக்திகள் சில நடைமுறைச் சிக்கல்களை காரணம் காட்டி இந்நாட்டு அப்பாவி மக்களை திசை திருப்ப முற்படுகின்றனர். இவர்கள் தான் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் விவகாரத்தை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயல் என்று சுட்டிக்காட்ட முனைகின்றனர்.
ஆனால் நான் இந்த விடயம் தொடர்பில் யாழ் கட்டளைத் தளபதி மஹேஸ் சேனாநாயக்கவுடனான சந்திப்பில் வினவிய போது அவர் யுத்தம் முற்றுப்பெற்றதிலிருந்து 25 தடவைகளுக்கும் அதிகமாக இவ்வாறான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட சம்பவமும் அவ்வாறாதொன்றே என்றும் இதனை தேசிய பாதுகப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த விவகாரம் தொடர்பில் போலியான செய்திகள் பரவுகின்றன. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிடின் கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்ற கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும். அவ்வாறான சூழலுக்கு முகம்கொடுக்க மக்கள் தயாரில்லை. ஆனால் அரசியல் வாதிகள் தமது கருத்துக்களை மக்களிடையே திணித்து தமது கருத்தையே மக்கள் கருத்தாக்க முனைவதால் இனங்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றது.
வடக்கில் உள்ள அப்பாவி மக்கள் ஊடகங்கள் மூலமோ அல்லது வேறு வழியிலோ தமது கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. தெற்கு மக்களும் அவ்வாறே உள்ளனர். மக்கள் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையுமே எதிர்பார்ககின்றனர். மூவின மக்களின் நிலைப்பாடும் இதுவேயாகும். ஆனால் இந்நிலைப்பாட்டை மாற்றி இனவாத கொள்கைக்குள் மக்களை ஈர்க்க சில குழுக்கள் முயற்சிக்கின்றர். அந்த குழுக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இன்று எமது நாடு மட்டுமல்லாது இனவாத குழுக்களின் நெருக்கடியை முழு உலகமும் எதிர்கொண்டுள்ளது. இவ்வாறான சந்திர்ப்பத்தில் உள்நாட்டிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதில் அர்த்தமில்லை. எமது நாட்டில் முப்பது வருட யுத்த அனுபவமுள்ள பலமிக்க இராணுவப்படை உள்ளது. அதனால் தேசிய பாதுகாப்புக்கு யாரும் இலகுவில் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
அதேபோல் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதன்போது வடக்கிலிருந்து 24 மணிமத்தியாலங்களில் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். இதனால் நல்லிணக்கம் ஏற்பவடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மக்கள் மத்தியில் தற்போது நிலவும் இன மற்றும் மத ரீதியிலான வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை மேம்படுத்தவும் இதுவே சிறந்த முறையாக அமையும்.
இவ்வாறு இன்று நாட்டில் நல்ல செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கும் போது இனவாத குழுக்களின் செயற்பாடுகளால் அதற்கு முட்டுக்கட்டையிடப்படுகின்றது. 30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்ற நாட்டில் மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை எவ்வாறு நிலைகொள்ளச் செய்வது என்பதும் எந்த அளவு கடினமானது என்பதும் இனவாத குழுக்களுக்கு விளங்கவில்லை.
அதனால் இவர்கள் தற்கொலை அங்கி மீட்பு விவகாரம் போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் நைனாதீவில் புத்தர் சிலை வைக்கபோன விடயத்தை இனவாத ரீதியில் பார்த்தனர். இந்த விடயத்தில் கடற்கரை பாதுகாப்பு அதிகாரசபையின் அங்கீகாரம் வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட எழுத்துமூல ஆவணங்கள் இருக்கின்ற நிலையிலும் ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளை மையப்படுத்தி அந்த விடயத்திலும் இனவாதத்தை தூண்டிவிட முற்பட்டனர்.
இவர்களை விட இன்று ஊடகங்கள் செயற்படும் விதமும் வேதனையாகவுள்ளது. நைனாதீவு விவகாரம் பூதாகரமாவதற்கு அடித்தளமற்ற தகவல்களை வெளியிட்ட ஊடகங்களே பொறுப்புகூற வேண்டும். ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுகின்றமையே சிக்கல் தோன்ற பிரதான காரணமாகியுள்ளது.
அரசாங்கம் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரிதும் அக்கறை செலுத்துகின்றமை குறித்து தவறான கண்ணோட்டத்தில் பாரக்கப்படுகின்றது. வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதால் தெற்கு மக்களை கவனிக்கவில்லை என்று பொருள்படாது. ஒப்படளவில் பார்க்கின்ற போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் அதிகமாகவுள்ளன. அதனால் அவர்களின் ஜீவனோபாய மேம்பாடு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
இதனையும் இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் சில தரப்புக்களுக்கு நல்லிணக்கம் என்ற வார்த்தையும் வேடிக்கையாகவுள்ளது. இன்று விஞ்ஞானம் கற்பதைவிடவும் அரசியல் பாடம் கற்பதே கடினமாக உள்ளது. பல்வேறு பட்ட கருத்து வேறுபாடுகளை கொண்ட மக்கள் குழுக்களை நிர்வகிப்பது மிகக் கடினமான செயலாகும். எனவே ஊடகங்களும் பொறுப்பான வித்தில் செய்திகளை வெளியிட்டு நடைமுறை சிக்கல்கள் ஏற்படாதிருக்க வழிசெய்ய வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment