எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக முடிந்து விடக் கூடியவை அல்ல. ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கும். ஆனால் திருமணமான சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பின்னர் தான் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கத் துவங்கும். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி… ஈகோ, கருத்து வேறுபாடு, சுய நலம், முன் கோபம், தனித்துவம் ஆகியவை கபகபவென்று கசிய ஆரம்பிக்கும்! இவற்றையெல்லாம் முன்பே எதிர்பார்த்து, நிலவரத்துக்கு ஏற்றபடி சமாளித்துக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.
கூட்டுக் குடும்பம் என்றால், இதுப்போன்ற பிரச்சனைகள் வெடிக்கும் போது, அங்குள்ள பெரியவர்கள் அறிவுரை கூறி அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆனால் இப்போதிருக்கும் தனிக் குடித்தனம் என்ற காலச் சூழ்நிலையில் புதுத் தம்பதிகளுக்கு உதவ யாருமே உடன் இருக்க மாட்டார்கள். சுயமாகச் சிந்திக்கவும் அவர்களுக்கு நேரம் போதாது. விளைவு… விவாகரத்து தான்!
இதுப்போன்ற பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது? எப்படிச் சமாளிப்பது? திருமண பந்தம் உடையாமலிருப்பது பெரும்பாலும் ஆண்களின் கைகளில் தான் உள்ளது. பிரச்சனைகள் தோன்றும் போது, பெண்கள் எளிதில் சோர்ந்து போவது இயல்பு தான். எனவே, அவற்றை ஆண்கள் தான் சமாளிக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் கூறப் போகும் சில விஷயங்களை திருமணத்திற்கு முன்பே ஆண்கள் சிந்தித்து வைத்துக் கொண்டால், அவர்கள் வாழ்க்கை அமோகமாக இருக்கும்!
மனதளவில் தயாரா?
‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று சொல்வார்கள். அது ஒரு ஜோக் அல்ல; மனைவியை அன்புடன் அரவணைத்துக் கொள்வது, குழந்தைகளைக் கவனிப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, சம்பாதிப்பது என்று ஏராளமான பொறுப்புணர்ச்சிகள் அதன் பின் ஒளிந்து கிடக்கின்றன. அந்தத் திருமண பந்தத்திற்கு நீங்கள் மனதளவில் தயாராக இருக்கிறீர்களா? அப்படின்னா, அடி தூள்!
குழந்தை எப்போ வேணும்?
நம் நாட்டில் புதிதாகத் திருமணமாகும் ஏராளமான தம்பதிகளுக்கு உடனடியாகப் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் இருப்பதில்லை. சில வருடங்களாவது என்ஜாய் செய்துவிட்டு, அப்புறம் பெற்றுக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடத் தான் பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் கணவன்-மனைவி இருவருக்கும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல் தான். ஒருவேளை, குழந்தை பெற்றுக் கொண்டால், அதை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் ஆரம்பத்திலேயே திட்டமிட்டிருப்பது மிகமிக அவசியம்.
போதுமான சம்பாத்தியம் உள்ளதா?
உத்தியோகம் புருஷ லட்சணம்! மனைவி சம்பாதிக்கிறாளோ இல்லையோ, கணவன் கண்டிப்பாகத் தன் குடும்பத்திற்காகச் சம்பாதித்துக் கொடுப்பது முக்கியம். மாதச் சம்பளம் வாங்குங்கள் அல்லது ஒரு நல்ல தொழிலை நடத்துங்கள். குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு இது மிகவும் முக்கியம், கட்டாயம், அவசியம். இதற்கு 100% நீங்கள் தயார் என்றால், தைரியமாக திருமண பந்தத்தில் நுழையுங்கள்!
கூட்டுக் குடித்தனமா? தனிக் குடித்தனமா?
இதற்கும் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைப் பற்றி உங்கள் மனைவியிடம் ஆரம்பத்திலேயே தெளிவாகப் பேசிவிட வேண்டும். இரண்டு விதமான குடித்தனத்திலும் உள்ள நிறைக் குறைகளை அலசி ஆராய்ந்து, இருவரும் சேர்ந்து முடிவெடுத்தால் மிகவும் நல்லது. எப்படி இருந்தாலும், உங்கள் மனைவியை நீங்கள் விட்டுக் கொடுத்தல் ஆகாது. அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால், வாழ்க்கை சிறக்கும்.
மனைவிப் பெயரை மாற்றலாமா?
உங்கள் மனைவி உங்களுடைய பெயரைத் தன் பெயருக்குப் பின் போட்டுக் கொள்வதா என்ற குழப்பத்தையும் ஆரம்பத்திலேயே சிந்திக்க வேண்டும். இது ரொம்பவும் சென்ஸிட்டிவ்வான விஷயம். எனவே, இதில் முடிவெடுக்கும் முழு உரிமையையும் உங்கள் மனைவியிடமே விட்டுவிடுவது நல்லது. அதற்கு நீங்களும் தயாராக இருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment