தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வளர்இளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். புள்ளிவிவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.
வளர்இளம் பருவத்தினரின் பெரும்பாலான தற்கொலை முயற்சிகளுக்கு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே முக்கிய காரணம். பெற்றோர் திட்டுவதால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவது, தாங்கள் கேட்பதை பெற்றோர் வாங்கித்தராத காரணங்கள், கருத்து வேறுபாடு என பல காரணங்கள் இருக்கலாம். அதிலும் வளர்இளம் பருவத்தில் வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் அறிவுரைகள், எட்டிக்காயாகக் கசப்பதால் எளிதில் வாக்குவாதம் வெடித்துவிடும். பின்னர் அது முற்றி, தற்கொலை முயற்சியாக மாறிவிடும்.
நண்பர்களுடன் ஏற்படும் மனத்தாங்கல், ஒரு தலைக்காதல், காதல் தோல்வி, படிப்பில் நாட்டமின்மை, தேர்வில் தோல்வி, வாழ்க்கையை வெறுமையாக உணர்வது போன்ற தனிப்பட்ட காரணங்களும் தற்கொலையில் முடியலாம். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், அவசரப்பட்டு முடிவெடுக்கும் தன்மை, ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமை போன்ற குணரீதியான காரணங்களும் உண்டு. விடலைப்பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில், மனநோய்கள் முக்கிய பங்குவகிக்கின்றன.
ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மனநோய் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பால் நிகழலாம். மன அழுத்த (Depression) நோயின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். வளர்இளம் பருவத்தினரின் மரணங்களுக்கு முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று.
0 comments:
Post a Comment