T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் வென்றுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் ஆடவர் இரண்டாவது முறையாக டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர்கள் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றனர்.
மிகவும் நெருக்கடியான கட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களை மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் எதிர்கொண்டனர்.
எனினும் மார்லன் சாமுவேல்ஸும், பிராத்வையிட்டும் அதிரடியாக ஆடி வெற்றியை தமது அணியின் பக்கம் திருப்பினர்.
கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில் பென் ஸ்டோகஸ் வீசிய அந்த ஓவரில் பிராத்வையிட் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
டி 20 வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் ஒரே நேரத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
முன்னதாக ஆடிய இங்கிலாந்து அணியினர் தமது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக ஜோ ரூட் 54 ஓட்டங்களை எடுத்தார். எனினும் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
மார்லன் சாமுவேல்ஸ் மட்டுமே இறுதிவரை உறுதியாக நின்று ஆடி அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார்.
0 comments:
Post a Comment