ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கி வரும் ‘கடம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்யா காட்டுவாசியாக நடிக்கிறார். இப்படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகள் தாய்லாந்தில் நடக்கிறது.
தாய்லாந்து நாட்டின் சியாங் மை என்ற பகுதியில் வரும் ஜூலை 1ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனால் முன்கூட்டியே ஆர்யாவும், இயக்குனர் ராகவனும் செல்லவிருக்கிறார்கள். கிளைமேக்ஸ் காட்சியில் யானைகளுடன் ஆர்யா நடிப்பது போன்ற காட்சிகளை உருவாக்க இருக்கிறார்கள். அதனால் பயிற்சிக்காக முன்கூட்டியே செல்கிறார்கள்.
தாய்லாந்தின் யானை பண்ணையிலுள்ள 300-க்கும் மேற்பட்ட யானைகளில் இருந்து 50 யானைகளை படப்பிடிப்பிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஐம்பது யானைகளுடன் ஆர்யா கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கவிருக்கிறார். அதனால் யானையை எப்படி கட்டுப்படுத்துவது, அதனுடன் பழகுவது சார்ந்த பயிற்சியை பாகன்கள் ஆர்யாவிற்கு சொல்லித்தர இருக்கிறார்கள்.
இந்த காட்சிக்காக மட்டும் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் முடிந்ததும், ஆர்யா, கேத்ரின் தெரசாவிற்கான மீதமுள்ள காட்சிகளை தலகோனா பகுதியில் படப்பிடிப்பு நடத்த, படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment