மாணவர்களை உலகை வெற்றிகொள்ளும் விற்பன்னர்களாக மாற்றி நாடு என்றரீதியில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு அரசினால் மேற்கொள்ளப்படும் சிறந்த முதலீடு கல்விக்காக மேற்கொள்ளும் முதலீடு ஆகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கல்விக்காக பயன்படுத்துவதற்கு மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஆகக் கூடுதலான ஒதுக்கீடு 2016ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், கல்வியானது அவ்வளவு தூரம் பெறுமதிவாய்ந்தது என்தாலேயே இவ்வளவு தொகை கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்டார்.
குருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலையின் நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் இன்று (24) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நற்பண்புடைய மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொறுமை, இலட்சியம், அடக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியன விளையாட்டின் மூலம் வளர்த்தெடுக்கப்படுவதால் நாடுகளும் சமூகங்களும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
பழைய மாணவர் சங்கமானது பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அனுசரணை வழங்குவதால் இது அரசாங்கத்திற்கு பாரியதொரு நிவாரணமாக அமைகின்றதெனவும் தான் கற்ற பாடசாலைக்கு தன்னால் இயலுமானவாறு சேவை செய்வது அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளதென ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் பாடசாலையின் மாணவர் படையணியினரால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டு அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் விழா இடம்பெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் எட்டு ஓடுபாதைகளைக் கொண்ட 25 மீற்றர் தூரம் கொண்ட நீச்சல் தடாகத்தையும் விளையாட்டுத் தொகுதியையும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
இப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரான திரு. சரத் பண்டாரவினால் ஜனாதிபதி அவர்களின் உருவப்படம் அவ்விடத்திலேயே வறையப்பட்டு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தல் மற்றும் அதிபர் திரு. யாப்பா காமினி திலகரத்னவினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தல் இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்கத்தினால் சிறுநீரக நிதியத்திற்குப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதியிடம் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வடமேல் மாகாண ஆளுனர் அமரா பியசீலி, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எல்.டப்.சீ.பீ.பீ.ராஜகுரு, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வடமேல் மாகாண சபைத் தவிசாளர் லக்ஷ்மன் வெடருவ, மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment