வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இப்படத்திற்கு AK 57 என்று தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளனர்.
அஜித்துக்கு ஜோடியாக இப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் மற்றுமொரு ஸ்டைலிஷ் நடிகை வேண்டுமென்று படக்குழு தேடிவருகிறது. இதற்காக கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசனை நடிக்கவைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பால்கி இயக்கத்தில் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் “ஷமிதாப்” படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்ஷரா என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்ட படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்ல இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அஜித் படத்திற்கான இரண்டாவது ஹீரோயினை இன்னும் படக்குழு உறுதிசெய்யவில்லை.
அஜித்தின் AK57 படத்தை, ' உலகம் சுற்று வாலிபன்' 'ஜப்பானில் கல்யாணராமன்' படங்களின் பாணியில் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க போகிறார்கள். ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பதை, டைரக்டர் சிவா, கேமராமேன் வெற்றி, ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, ஆர்ட் டைரக்டர் மிலன் ஆகியோர் கொண்ட குழுவினர், ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று லொகேஷன்களை பார்த்துவிட்டு முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத், ஒரு பாடலுக்கான இசைப்பதிவை மட்டும் முடித்துவிட்டாராம். மீதமுள்ள ஐந்து டிராக்கிற்கான இசையமைப்பில் அவர் தீவிரமாகியிருக்கிறார் என்கிறது ஏகே 57 படக்குழு.
0 comments:
Post a Comment