சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா
திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
விவரிக்க முடியாத துயரம்: முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திங்கள்கிழமை நள்ளிரவு 12.10 மணிக்கு வெளியிட்டது.
அந்த அறிக்கை விவரம்:
""சொல்லொணாத் துயரத்துடன் முதல்வர் ஜெயலலிதா புரட்சித் தலைவி அம்மா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு இறந்து விட்டதை அறிவிக்கிறோம்.
காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுடன் முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
சாப்பிடத் தொடங்கிய முதல்வர்: இதையடுத்து அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தாமே உணவு எடுத்து சாப்பிடத் தொடங்கினார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அண்மையில் மாற்றப்பட்டார். சிறப்பு சிகிச்சைப் பிரிவிலும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது.
திடீர் மாரடைப்பு: இவ்வாறு அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மிகக் கடுமையான மாரடைப்பு (இதயச் செயலிழப்பு-"மாஸிவ் கார்டியாக் அரெஸ்ட்') ஏற்பட்டது. இதயத்தை மீண்டும் செயல்பட வைப்பதற்கான "ரிசûஸட்டிûஸஷன்' முதலுதவி சிகிச்சை முறைகள் செய்யப்பட்டன; அவை பலன் அளிக்கவில்லை.
தீவிர முயற்சிகளை மேற்கொண்டும்கூட...: உடனடியாக ஒரு மணி நேரத்துக்குள் செயற்கை இதய செயல்பாட்டு("எக்ஸ்ட்ராகார்ப்போரியல் லைஃப் சப்போர்ட்') கருவி, செயற்கை சுவாசக் கருவி ஆகியவை பொருத்தப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை மீண்டும் செயல்படச் செய்வதற்கு உரிய அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
அனைத்து வகையான தீவிர முயற்சிகளையும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள்
மேற்கொண்டும்கூட முதல்வர் ஜெயலலிதாவின் பிற உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவரை இதயச் செயலிழப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாமல், திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது.
நாட்டின் துயரத்தில் இணைகிறோம்: அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க ஓய்வின்றி உழைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பால் வாடும் நாட்டு மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் துயரத்தில் அப்பல்லோ மருத்துவமனை தன்னை இணைத்துக் கொள்கிறது'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment