சமூக ஊடகங்களை செவ்வனே பயன்படுத்த 8 வழிகள்

(identacor.com)
நமது அன்றாட நடவடிக்கைகளின்போது, நம்மில் பலரும் சமூக ஊடகங்களுடன் தொடர்புபடுகின்றோம்.

நமது நாட்டில் மட்டுமன்றி, உலகின் பல நாடுகளின் நிலையும் இதுவே. உலகின் மொத்த சனத்தொகை 7.3 பில்லியனாக உள்ள நிலையில், அச்சனத்தொகையில் 3.41 பில்லியன் பேர், அன்றாடம் இணையத்துடன் இணைகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த இணையப் பயனாளர்களில் 2.30 பில்லியன் பேர் நேரடியாக சமூக ஊடகங்களுடன் தொடர்புபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக மக்கள் இவ்வாறுதான் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுரையை வாசிக்கின்ற நீங்கள் அனைவரும், ஏதேனும் ஒரு சமூக ஊடகத்திலோ அல்லது பல சமூக ஊடகங்களிலோ உறுப்பினராக இருப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். 

சமூக ஊடகங்களை மிகவும் சாதுர்யாமாகப் பயன்படுத்துவது எங்கனம்? ஆம், அது பற்றித்தான் நாம் இங்கு உங்களோடு கதைக்க உள்ளோம்.

1. நட்பு பட்டியலில் உள்ள அனைவரும் நண்பர்களா?

(identacor.com)



நமது சமூக ஊடக கணக்குகளில் பெருமளவு நண்பர்கள் (Friends) உள்ளனர். பெருமளவு ஓன்லைன் நண்பர்கள் இருப்பதில் நலவு உள்ளதுபோன்றே, கெடுதியும் உள்ளது. நாம் நட்பு பட்டியலில் (Friend List) இணைத்துக் கொள்ளும் அனைவரும், நமது நண்பர்களா? என்பது குறித்து நாம் எப்போதும் சிந்திக்க வேண்டும்.

நாம் பகிரும் (Share) அனைத்தையும் (அதன் நுகர்வு அமைப்புக்களை Settings நாம் மாற்றாதவிடத்து) நமது நண்பர்கள் பார்க்கவும், அதற்கு எதிர்வினையாற்றவும் கூடியவாறே சமூக ஊடகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, வாழ்வின் முக்கிய சம்பவங்கள், புகைப்படங்கள், அவ்வப்போது தோன்றுகின்ற கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிடும்போது, நம் நட்பு பட்டியலில் உள்ள நாம் அறிந்த, நாம் அறியாத அனைவருக்கும் அதனைப் பார்க்க முடியும் என்பதை நாம் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். 

எனவே, நட்பு பட்டியலில் எவரையேனும் இணைப்பதாயின், நன்கு யோசித்ததன் பின்னரே இணைக்க வேண்டும். அத்தோடு, ஏற்கனவே நல்ல நண்பராக இருந்தபோதும், உங்களுக்கு தொந்தரவையும், உளரீதியான நெருக்குதலையும் எவரேனும் ஏற்படுத்துவராயின் அவர்களை block செய்துவிட தயங்க வேண்டாம்.

2. நாம் பதிவுசெய்பவை அனைத்தும் பிரயோசனமானவையா?




மக்கள் அவசியமானவற்றைத்தான் உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்களா? என்ற கேள்வி பேஸ்புக், டுவிட்டர், Google+ போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது நம்மில் பலருக்கும் எழுகின்றது.


இங்கு ஒரு விடயம் தெளிவானதாகும். அதாவது, இணையத்தில் ஏனையோருடன் எதனைப் பகிர்ந்துகொள்கிறோம்? எதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து பலருக்கும் தெளிவில்லை. இதில் உள்ள அபாயகரமான விடயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? நாம் நமது காலக்கோட்டில் (timeline) வெளியிடும் எதையும், நமது நட்புப் பட்டியலிலுள்ள எவரும், பகிர அல்லது மீள்பதிவுசெய்ய முடியும். சற்று சிந்தித்துப் பாருங்கள்!, நீங்கள் மிகவும் உணர்ச்சி வேகத்தில் இருக்கும் நேரத்தில், அந்த உணர்ச்சி வேகத்தை வெளியிடுவதற்காக, வெறுப்பைத் தூண்டும் ஒரு கருத்தை, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிகிறீர்கள். அந்தக் கருத்தை இன்னுமொருவர் பகிர்ந்தால், நீங்கள் கனவிலேனும் நினைத்திராத அளவுக்கு அது பரவிச் செல்லலாம்.

அதேபோன்று, இணைய வெளியின் இயல்பைப் புரிந்துகொள்ளாமல், பலரும் பல கருத்துக்களை வெளியிடுவதை நாம் காண்கிறோம். இந்தக் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம், சமூகத்துக்கு ஏதேனும் நன்மையை அவர் நாடியிருக்கலாம். 

 ஆனாலும், அவர்கள் சமூகத்தில் கோமாளிகளாக பரிணமிக்கின்றனர். இது மிகவும் துரதிஷ்டவசமான ஒரு நிலையாயினும், இந்த உலகம் அவ்வாறுதான் இயங்குகின்றது. எனவே, அவசியமானவற்றை மட்டும் உலகத்தாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்பதே எமது பரிந்துரையாகும்.

3. நல்லதொரு Profile படத்தை பயன்படுத்துங்கள்



இப்போது பல தனியார் கம்பனிகளும், தொழில்களுக்கு விண்ணப்பதாரிகளை இணைத்துக்கொள்ளும்போது, அவர்களின் சமூக ஊடக கணக்குகள் குறித்தும் கரிசனை செலுத்துகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலவேளை, இதுவரையிலும் நீங்கள் அது குறித்து அறிந்திராதிருக்கலாம். சரி, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய சரியான நேரம் இதுதான். 

ஒரு 10 நிமிடத்தை ஒதுக்கி, உங்களது சமூக ஊடக கணக்குகளின் காலக்கோட்டில் சற்று உலா வாருங்கள். நீங்கள் பதிந்திருக்கின்ற பதிவுகளும், புகைப்படங்களும் உங்களது பிம்பத்தை உயர்த்துவனவாக இருக்கின்றனவா? அல்லது உங்கள் பிம்பத்தை தாழ்த்துவனவாக இருக்கின்றனவா? என்று சிந்தித்துப் பாருங்கள். அத்தோடு, நீங்கள் பகிர்ந்திருக்கின்ற விடயங்களை அடிப்படையாக வைத்து, ஒருவர் உங்களை, உங்களது ஆளுமையை எவ்வாறு மட்டிடுவார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இப்போது சொல்லுங்கள், நீங்கள் ஒன்லைனில் நடந்து கொள்ளும் முறை குறித்து நீங்கள் பெருமைப்படுகிறீர்களா? அல்லது வெட்கமைகிறீர்களா?


நாம் ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். அதாவது, இலங்கையின் மாகாணங்களுக்கு இடையிலான ஒரு கருத்து மோதல், கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் நடைபெற்றது. இதன்போது நீங்கள் ஏதோ ஒரு மாகாணத்துக்கு ஆதரவளித்து, ஏனைய மாகாண மக்களை அசௌகரியப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 

இப்போது நீங்கள் நாட்டின் பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகப்பரீட்சைக்கு செல்கிறீர்கள். அங்குள்ள தலைவர், நீங்கள் ஏற்கனவே அசௌகரியப்படுத்திய ஒரு மாகணத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது இப்போது அந்த ஒரு மாகாணத்தில் வசிப்பவராகவோ இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, உங்கள் சமூக ஊடகக் கணக்குகள் மீது வலம் வருகின்ற அவர், அவரது மாகாணம் குறித்து நீங்கள் ஏளனமாக தெரிவித்திருந்த கருத்துக்களை பார்க்கிறார். 

இப்போது அவர் உங்கள் விடயத்தில் எவ்வாறான ஒரு முடிவை எடுப்பார்? மனித உள்ளம் எவ்வாறு இயங்குகின்றது என்று நம்மில் எவருக்கும் சரியாகச் சொல்ல முடியாது. எனவே, எந்தவொரு பிரயோசனமுமற்ற விடயங்களிலும் ஈடுபட்டு, இவ்வாறான அசெளகரிய நிலைக்கு ஆளாகாமல் இருப்பது சிறப்பு.
எளிமையாகச் சொல்வதென்றால்… உங்களது புகைப்படம் (Profile picture), அட்டைப்படம் (cover picture) முதல் நீங்கள் பகிர்கின்ற புகைப்படங்கள் மற்றும் பதிகின்ற கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் பிம்பத்தை உயர்த்தக்கூடியனவாகவே பதியுங்கள். 

இன்று சமூக ஊடகங்கள் என்பவை, ஒருவரின் ஆளுமையை மதிப்பீடு செய்கின்ற இன்னுமொரு அளவுகோல் என்பதை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. நிஜ உலகில் வாழுங்கள்

(plusyourbusiness.com)


ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை உங்களது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டக்ரேம் கணக்குகளை சரிபார்க்காதபோதும், நீங்கள் சுவாசிப்பது நின்றுபோகாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தோடு, பேஸ்புக் /டுவிட்டர் / இன்ஸ்டக்ரேம் கணக்குகளில் பதிவுகளும், புகைப்படங்களும் பகிராமல் நட்சத்திர உணவகங்களில் சுவையான உணவுகளை உண்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்பது உங்களுகத் தெரியுமா?


ஆம், நீங்கள் அவற்றை தெரிந்து வைத்திருக்கலாம். ஆனாலும், நீங்கள் அதை மறந்திருக்கலாம். நீங்கள் இன்னுமொருவருடன் கதைக்கின்றபோது, உண்கின்றபோது உங்களது முழுமையான கவனத்தை அதில் செலுத்துங்கள். பெற்றோர், நெருங்கியோர், நண்பர்களுடன் பயணங்கள் செல்லும்போது அவர்களுடன் கதையுங்கள். சுற்றுச் சூழலை அனுபவியுங்கள். நீங்கள் விரும்பிய பாடல்களைப் பாடுங்கள். உங்களைச் சூழ உள்ளவர்களுடன் சந்தோசமாக இருப்பதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இணையத்தில் இருப்பது போன்றே, நிஜ உலகிலும் வாழுங்கள்.

5. அடுத்த மணித்தியாலத்தில் உலகம் அழியாது



நாம் உங்களிடம் இப்படியொரு கேள்வியைத் தொடுக்கலாமா? அதாவது, நீங்கள் உங்களது காலக்கோட்டில் ஒரு புதிய பதிவையோ அல்லது புகைப்படத்தையோ இட்டதன் பின்னர், அதைப் பார்ப்போர் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர் என்று பார்க்க உங்களுக்கு கடுமையான தேவை ஏற்படுகிறதல்லவா?


உங்களது பதில் ‘ஆம்’ எனில், ஏன் அவ்வாறு ஏற்படுகின்றது என்று சிந்திக்க வேண்டும். 

உங்களது பதிவுக்கும், புகைப்படத்துக்கும் ஏனையோர் வழங்குகின்ற எதிர்வினைகளை (Like/Comment/Share) உடனடியாகவே பார்த்துக்கொள்வதற்கான கடுமையான ஆசை, சமூக ஊடகங்கள் மூலம் பெரும்பாலும் படிப்படியாக ஏற்படுத்தப்படுகின்றது. எமது பதிவுக்கு எத்தனை பேர் விருப்பு (like) இட்டிருக்கிறார்கள்? புதிய Profile புகைப்படத்தில் எத்தனை பேர் கருத்து (Comment) தெரிவித்திருக்கிறார்கள்? என்ற விடயங்களை, நாம் ஐந்து நிமிடங்களுக்குகொருமுறை பார்ப்பது அதனாலேயாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமக்கு தேவையான எதிர்வினைகள் அங்கு வழங்கப்பட்டிருக்காவிடின், அவர்கள் சிலவேளை உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு உள்ளாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உண்மையான கதை இதுதான். அதாவது, நீங்கள் உங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும் இட்ட நேரத்தில், பெரும்பாலானோர் ஒன்லைனில் இல்லாதிருந்திருக்கலாம். அல்லது, உங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும் ஏனையோர் இன்னும் காணாதிருந்திருக்கலாம். அல்லது, வேறு ஏதேனும் தொழினுட்ப கோளாறு காரணமாக, அவற்றை இன்னும் யாரும் அவதாநிக்காது இருந்திருக்கலாம். 

இவ்வாறான பல காரணங்கள் இருக்கலாம். எனவே, எமது பதிவுகளையும், புகைப்படங்களையும் எத்தனை பேர் Like செய்திருக்கிறார்கள்? அவற்றில் எத்தனை பேர் Comment செய்திருக்கிறார்கள்? என்பது குறித்து எப்போதும் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்பதுவே எமது பரிந்துரையாகும். அப்படி அலட்டிக்கொள்வது எந்தவொரு பயனுமற்ற வீண் வேலையாகும்.

6. தனிப்பட்ட தகவல்களை உங்களோடு மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்


(aisn.net)

உங்களது வீடு எங்கே இருக்கின்றது, வீட்டு முகவரி, தெலைபேசி இலக்கம், வங்கி கணக்கு இலக்கம் போன்ற முக்கியமான தனிப்பட்ட விடயங்களை சமூக ஊடகங்களின் நட்பு பட்டியலில் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் நன்று. குறிப்பாக, பலரும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ தமது தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை, அனைவரும் பார்க்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருப்பதை நீங்களும் கண்டிருப்பீர்கள். இப்போது உங்களது தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் எல்லோரும் பார்க்கும் வகையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாயின், அவற்றை நீங்கள் மாத்திரம் பார்க்கும் வகையில் சரி செய்து கொள்வது அறிவுடைமை என்பதே எமது பரிந்துரையாகும்.


அத்தோடு, உங்களது profile இற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு அமைப்புக்களை (Security Setting) சரிசெய்து கொள்ளுங்கள். குறிப்பாக, வேறு நபர்களின் பதிவுகளிலும், புகைப்படங்களிலும் உங்களை ‘tag’ செய்வதை கட்டுப்படுத்தல், உங்களது காலக்கோட்டில் வேறு எவரும் எதனையும் பதிவு செய்ய முடியாதவாறு சரி செய்தல், தெரியாதவர்கள் அனுப்பும் செய்திகளை (message) களை ‘Spam Message’ களாக ஆக்குதல் போன்ற சின்னச் சின்ன விடயங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக, பெருமளவிலான தலையிடிகளைத் தவிர்த்து நீங்களும் ஒன்லைனில் வாழலாம்.

7. ஏனையோரின் (அந்தரங்க) தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்


(tctechcrunch2011.files.wordpress.com)

நம் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கின்றது. அதேபோன்று, நாம் எவருக்கும் சொல்லத் தேவையில்லாத விடயங்களும் இருக்கின்றன. சிலவேளை, வேறொருவரின் தனிப்பட்ட விவகாரமொன்றை நீங்கள் அறிந்து கொண்டு, அதனை சமூக ஊடகங்கள் வழியாக வேறு நபர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் மோசமான ஒரு வேலையை செய்வதாகவே நாம் பார்க்கிறோம்.


நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நடைபெறும் ஒரு நட்பு ரீதியான சந்திப்பில், உங்கள் சக பணியாளர் ஒருவர், அந்த இடத்தில் மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கேலியான நிகழ்ச்சியை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 

 நீங்கள் அந்த நிகழ்வை புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்கிறீர்கள். அந்த நிகழ்வுக்கு அங்கு வந்திருந்தோர் பற்றிய பூரண நம்பிக்கை காரணமாகவே, அந்த நபர் அந்த இடத்தில், அந்த நிகழ்ச்சியை மேற்கொள்கிறார். ஆனால், நீங்கள் புகைப்படத்தை அல்லது வீடியோவை சமூக ஊடகங்கள் வழியாக வெளியிட்டால் என்ன நடக்கும்?.

 எந்தவொரு பொறுப்புமின்றி மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வு குறித்த விடயங்களை சமூக ஊடகங்களில் பேசித் திரியும் நபர்கள் சமூக ஊடகங்களில் நிறைந்திருப்பது நாமும் நீங்களும் அறிந்த ஒரு உண்மையாகும். சமூக ஊடகங்கள் வழியாக ஒரு வீடியோ மிக வேகமாகப் பரவினால், சம்பந்தப்பட்ட நபர் நிச்சயமாக சமூகத்தில் மிகவும் அசெளகரியத்திற்கு உட்படுவார்.


எமக்கு முழு உலகையும் திருத்த முடியாது. ஆனாலும், நம்மை நம்மால் திருத்திக்கொள்ள முடியும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். நம்மைப் போன்றே எனையோருக்கும் தனிப்பட்ட விடயங்கள் உள்ளன என்பதையும், அந்த தனியுரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

8. உங்களை ஏமாற்ற இடம் கொடுக்காதீர்கள்


சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு கருத்தியல்களை உருவாக்குதல், அவற்றை வளர்த்தல், தமக்கு தேவையானவற்றை மக்கள்மயப்படுத்தல் போன்ற பல விடயங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பது, இப்போது உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தியல்கள் அரசியல், மதம், கலாசாரம் அல்லது வேறு எந்தத் துறைசார்ந்ததாகவும் இருக்கலாம். 2011 ஆம் ஆண்டு மத்திய கிழக்கெங்கும் பரவிய அரபு வசந்தம், 2014 ஆம் ஆண்டு யுக்ரேனில் மேற்கொள்ளப்பட்ட அரச விரோத போராட்டம் மற்றும் கிளர்ச்சி போன்றவை, சமூக ஊடகங்கள் மூலம் சமூகத்திலுள்ள அரசியல் கருத்தியல்களை மாற்றியமைத்த நிகழ்வுகளுக்கான சிறந்த உதாரணங்களாகும்.

 அத்தோடு, 2015 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளிலும் சமூக ஊடகங்கள் பெரும் தாக்கம் செலுத்தியிருந்ததாக, அது குறித்து ஆய்வு செய்த பலரும் தெரிவித்திருந்தனர்.


சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்தியல்கள் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், சில சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ. கலாசார ரீதியாகவோ சமூகங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி, அதன் மூலம் வேறு இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதையும் நாம் காணலாம். இந்த விடயம் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(bidnessetc.com)
(bidnessetc.com)

ஒவ்வொருவரதும் மதம், இனம், அரசியல் சார்புகள் மற்றும் இன்னும் பல முக்கியமான விடயங்களை கிளறி விட்டு, குளம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் குழுக்கள், அதற்குத் தேவையான பின்னணியை சமூக ஊடகங்கள் மூலமே உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் அவ்வாறான சமூக இயக்கங்களில் நன்நம்பிக்கையுடன் இணைவதாக இருக்கலாம். 

ஆனாலும், அந்த இயக்கங்களை சமூக ஊடகங்கள் மூலம் விதைக்கும் நபர்கள், மிகவும் திருட்டுத்தனமான குறிக்கோள்களுடன் அந்த வேலையை செய்திருக்கலாம். எனவே, சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக இயக்கங்களில் இணைவதற்கு முன்னர், ஒன்றுக்குப் பல தடவை அவை குறித்து நன்கு தேடி அறிந்துகொள்ளவது அவசியமாகும்.

எனவே, இனியும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது, இந்த விடயங்களை கருத்திற்கொண்டு,சாதுரியமாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்பதே எமது இறுதியான வேண்டுகோள். அத்தோடு, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்களை நீங்கள் அறிந்தவர்களுடனும் உங்கள் அன்புக்குரியவர்களுடனும் பகிர்ந்து கொள்வதன்மூலம் சமூக வலைத்தளங்களை சமூகத்தின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்காதவண்ணம் பாவித்துப் பயன்பெற வழிசமையுங்கள்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com