எனதினிய தமிழ்ப் பேசுஞ் சகோதர சகோதரிகளே,
“எழுமின், விழிமின்,
இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!”
என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் எமது மக்களுக்கு நான் கூறுவதும் அதுவே.“எழுமின்! விழிமின்!இலட்சியங்களை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!
என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் எமது மக்களுக்கு நான் கூறுவதும் அதுவே.“எழுமின்! விழிமின்!இலட்சியங்களை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!
”Arise, Awake, stop not until you reach your goals!!
எமது பாதை கரடு முரடாக அமையப் போகின்றது. அதற்கு நாங்கள் எங்களைத் தயார்
படுத்த வேண்டியிருக்கின்றது.
69 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் எங்கள்
குறைகளைக் கூறிக் கொண்டு வருகின்றோம். ஆனால் செவிடன் காதில் மகுடி இசைத்த
கதையாகவே இருந்து வருகின்றது.
இதற்குக் காரணம் உறங்குபவனை எழுப்பலாம்.
உறங்குவது போல் பாசாங்கு செய்பவனை எழுப்புவது மிகச் சிரமம். ஒரு வேளை
பச்சைத் தண்ணீர் கொண்டு முகத்தில் தெளித்தால் அவன் எழும்பக் கூடும்.
உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ்
நடைபெறுகின்றது.
மக்களின் மனோ நிலையையே நாங்கள் பிரதிபலிக்கின்றோம்.
எங்கள் நடவடிக்கைகள் பிழையென்றும்,நாட்டில் இருக்கும் நற்சூழலை நாங்கள்
குழப்புகின்றோம் என்றும் எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள்
வாய்பேசா மடந்தைகளாக இருந்தால் அல்லது பெரும்பான்மையின அரசியல்வாதிகளுடன்
ஒத்தூதினால் எங்களுக்கு நற்சாட்சிப் பத்திரம் கிடைக்கும். துணிந்து எமது
குறைகளைக் கூறினால் அது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் எனப்படும்.
ஆகமொத்தம் எமக்கெது தேவை என்பதிலும் பார்க்க தாம் தருவதை நாங்கள் ஏற்க
வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் பெரும்பான்மை இன
அரசியல்வாதிகள். இன்னும் சில காலம் போனால் எங்களைப் பயங்கரவாதிகள்
என்பார்கள் என்று நினைக்கின்றேன். ஏற்கனவே அவ்வாறு கூறிவருகின்றார்களோ நான்
அறியேன்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் அமுலில் இருந்து
வருகின்றது. அதன் ஒரு அம்சம் பற்றி நான் தெளிவு படுத்துவது நன்மை பயக்கும்
என்று நம்புகின்றேன். ஒருவரை இன்னொருவர் கொல்கின்றார் அல்லது அடித்துத்
துன்புறுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அச் செயல் எங்கள்
குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் குற்றமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச் செயலை இனங்கண்டு குற்றவியல் வழக்கா பயங்கரவாதத் தடைச்சட்ட
வழக்கா பதிய வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு அடிப்படை வரையறுத்தல்கள்
எவையும் சட்டத்தில் கூறப்படவில்லை. இதனைத் தீர்மானிப்பது அரசே அல்லது அரச
அதிகாரிகளே அல்லது இராணுவத்தினரே அல்லது பொலிசாரே.
இங்கு தான் எம் மக்கள்
பயங்கரவாதிகள் என்று முத்திரை ஒட்டப்படுகின்றார்கள். அரசு நினைத்தால்
ஒருவர் பயங்கரவாதி; இல்லையேல் அவர் சாதாரணக் குற்றவாளி. முன்னர் பயங்கரவாத
நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளியாக்கப் பட்டவரே பயங்கரவாதத்
தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படலாம் என்றோ ஒருவர் பயங்கரவாத
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரேயானால் அவை எவ்வாறு அடையாளப்படுத்தப்பட
வேண்டும் என்றோ, அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே பயங்கரவாதத்
தடைச்சட்டத்தின் கீழ் ஒருவருக்குக் குற்றப்பத்திரிகை தயாரிக்கலாம் என்றோ
சட்டத்தில் கூறப்பட வில்லை. அரசோ, அரசின் சாட்சிகளோ ஒருவரைப் பயங்கரவாதி
என்று அடையாளப்படுத்தினால் அதனை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன.
குற்றஒப்புதல் வாக்கு மூலங்கள் மற்றைய வழக்குகளில் ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டா. ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அதை மட்டும் வைத்து எம்
இளைஞர்கள் யுவதிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
குற்றம் உண்மையில்
நடந்தேறியதா என்பதைக் கூட நீதிமன்றங்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதாவது
குற்ற ஒப்புதல் கூறும் குற்றமானது உண்மையில் நடந்ததா என்று சுதந்திரமாக
நீதிமன்றம் அறிந்துகொள்ள வேண்டும் என்றொரு சட்டமில்லை. அவ்வாறு அறிய
பெரும்பான்மையான நீதிமன்றங்கள் சிரத்தை எடுப்பதும் இல்லை. இவை என்னுடைய பல
வருட நீதித்துறை சார்ந்த அனுபவம்.
இதனை இன்று ஏன் இங்கு கூறுகின்றேன்
என்றால் உரிமைகளைக் கோருவோர், உரிமைகளுக்காகப் போராடுவோர், உரிமைகளைத்
தாருங்கள் என்று உரக்கக் கேட்போர் யாவரும் ஆட்சியாளர்கள் பார்வையில்
பயங்கரவாதிகளாகவே காணப்படுகின்றார்கள். அன்று “வெள்ளையனே வெளியேறு”
என்றவர்களெல்லாம் சட்டத்தின் முன் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள்.
வெள்ளையன் வெளியேறியதும் கெப்பற்றிப்பொலவும், சூரசரதியேலும் இன்னும் பலரும்
சிங்கள மக்களின் வீர சூரர்கள் ஆனார்கள். இன்று எம்மை பயங்கரவாதிகளாகப்
பார்ப்பவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எமது உரிமைகளை நாம்
கோருவது குற்றமல்ல என்பதை எமது சிங்களச் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
எம்மைப் பயங்கரவாதிகள் என்போர் என்ன கூறப்
பார்க்கின்றார்கள்? நாங்கள் எங்கள் இராணுவத்தை வடக்கு கிழக்கில்
நிறுத்தியுள்ளோம்; பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலில் வைத்திருக்கின்றோம்.
ஆறாவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தையும் தொடர்ந்து அமுலில்
வைத்திருக்கின்றோம். பன்னாட்டு அரசாங்கங்களின் பரிந்துரைகளைப்
பெற்றுள்ளோம். இவ்வாறிருக்கவும் நீங்கள் உங்கள் உரிமைகளைக் கேட்கின்றீர்கள்
என்றால் நீங்கள் பயங்கரவாதிகள் தானே என்பது தான் தொடர்ந்து வந்த
அரசாங்கங்களின் அரசியல் நிலை.
உரிமைகள் அற்றவர்கள் தான் உரிமைகளையும்
உரித்துக்களையும் கேட்பார்கள். உரிமைகள் இருந்திருந்தால் ஏன் வெயிலில்
இருந்து, பனியில் காய்ந்து, மழையில் நனைந்து கேட்கப்போகின்றார்கள்?
இல்லாததால்த்தானே கேட்கின்றோம்.
இதைச் சிங்கள சகோதர சகோதரிகள் உணர
வேண்டும். எம் உரித்துக்களை நாம் கோர விடாது அடுத்து வந்த அரசாங்கங்கள்
தடுத்துள்ளன. கடுமையான சட்டங்களாலும் இராணுவப் பிரசன்னங்களாலும் அரசியல்
யாப்பு அனுசரணைகளுடனும் இதைச் சாதித்துள்ளார்கள்.
அது மட்டுமன்றி;
கடைசிப் போர் ஒருதலைப்பட்சமாக சர்வதேச நிறுவனங்கள், அரச சார்பற்ற
நிறுவனங்கள், ஊடகங்கள் எவருடைய பிரசன்னங்களும் இல்லாத நிலையில் சர்வதேச
போர் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை
சிங்கள மக்கள் யாவரும் அறிவர்.
அவ்வேளையில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்
புலிகள் மட்டுமல்ல. சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பெருவாரியாகக்
கொல்லப்பட்டனர். அவர்களின் எண்ணிக்கை திரிபுபடுத்தப்பட்டு மிகச் சொற்ப
தொகையாக எந்தவித மனச்சாட்சியுமின்றி சர்வதேச உலகிற்கு காட்டப்பட்டுள்ளது.
இதனால் விளைந்தது தான் சர்வதேச போர்க்குற்ற விசாரணை முன்மொழிவு. இந்தத்
தீர்மானம்; 2015ம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில்
சமர்ப்பிக்கப்பட்ட போது சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைந்து அதனை
ஏற்றுக்கொண்டனர்.
இருந்தபோதிலும் ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னரும் இலங்கை
அரசாங்கம் தான் அளித்த முக்கிய வாக்குறுதிகளை இதுகாறும் நிறைவேற்ற
முன்வரவில்லை.
அண்மையில் இன்னலுறும் கேப்பாப்பிலவு மக்களைக் காணச்
சென்றிருந்தேன். போகும் வழியெல்லாம் ஏக்கர் ஏக்கரான காடார்ந்த நிலங்களைக்
கொங்கிறீட் கட்டைகள் நாட்டி, கம்பி போட்டு, கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்
படைவீரர்கள். அவற்றிலே மக்களின் உறுதிக் காணிகளும் அடங்குவன. தம் சொந்த
இடங்களுக்கு எம் மக்கள் திரும்பிச் செல்வதற்கு ஆங்காங்கே தடையாக உள்ளார்கள்
இராணுவத்தினரும், கடற் படைவீரர்களும், ஆகாயப் படைவீரர்களும். அதற்கு
எதிராக எம்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களைத்
துன்புறுத்துகின்றார்கள்.
ஏன் என்று இவர்களிடம் கேட்டால்
பாதுகாப்புக்கு அவசியம் என்கின்றார்கள். யார் பாதுகாப்புக்காக இந்த
அடாவடித்தனம்? எங்கள் பாதுகாப்புக்காகவா அல்லது உங்கள் பாதுகாப்புக்காகவா
அல்லது அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காகவா என்று கேட்டால் பதிலில்லை.
எங்களுக்கு உங்கள் பாதுகாப்பு தேவையில்லை என்று திரும்பத் திரும்பக்
கூறுகின்றோம்.
போதிய பொலிசார் இருந்தால் பொறுப்பாக அவர்கள் பாதுகாப்பு
வழங்குவார்கள் என்று நாங்கள் கூறினால் அதற்கு அவர்கள்
செவிசாய்க்கின்றார்கள் இல்லை. அவர்கள் போட்டிருக்கும் பாதுகாப்பு
அரண்களையும், கட்டியுள்ள மாளிகைகளையும், எடுத்திருக்கும் எம்மக்களின்
காணிகளின் விஸ்தீரணத்தையும் பார்த்தால் இன்னும் 500, 600 வருடங்களுக்கு
மேலாகத் தாம் தொடர்ந்திருக்கப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில்த்தான்
அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை அதுதெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
அவர்கள் செய்வது பிழை என்று நாங்கள் கூறினால் நீங்கள் சமாதானத்தைச்
சீர்குலைப்பவர்கள் என்று எமக்குப் பட்டம் கட்டப் பார்க்கின்றார்கள்.
முன்னர் இந்திய அமைதி காக்கும் படைகள் நாங்கள் இங்கு 100 வருடங்களுக்கேனும்
இருக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு தான் வந்தார்கள். வி.பி.சிங்
அரசாங்கம் அவர்களைத் திரும்ப அழைத்தது. அது போல எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி
சிறிசேன அவர்களின் அரசாங்கம் இராணுவத்தினரைத் திரும்ப அழைக்க வேண்டும்.
தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற மனிதாபிமானத்துடன் பக்கச்சார்பின்றி
போருக்குப் பின்னரான மக்களின் பாதிப்புக்களை உணர்ந்து செயல்ப்படக்கூடிய
பொலிசாரை வடகிழக்கில் இரட்டிப்பாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே எமது ஒரு
கோரிக்கை.
போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் இராணுவத்தினரைத்
திரும்ப அழைக்காததன் மர்மம் என்ன? விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து
விட்டதாகக் கூறுகின்றார்கள். பின் எதற்காக வடக்கிலும் கிழக்கிலும் வான்
படைகளும், கடற்படைகளும், காலாற்படைகளும்? அளவுக்கதிகமான படைகளைத் தம்முடைய
தரைகளில் நிலை நிறுத்த இடமில்லை என்றுதான் அவர்களை எம்மத்தியில் உலாவ
விட்டுள்ளார்களா? அல்லது நாம் எவரும் சுதந்திரக்காற்றை உட்கொள்ளக் கூடாது
என்று நினைக்கின்றார்களா? அல்லது எமது பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப விடாது
எம் மக்களின் காணிகளையும், வீடுகளையும், கடைகளையும், கடற்கரைத்
தொழில்களையும், விவசாய நில புலன்களையும் நிரந்தரமாகச் சுவீகரித்து எம்மை
அடக்கி ஆள நினைக்கின்றார்களா?
ஒரு சில நாட்களுக்கு முன்னர் உள்ளுர் அதிகாரசபைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உரித்துக்கள், தத்துவங்கள்
சிலவற்றை 01.02.2017ல் இருந்து திரும்பப் பெற்று நகர அபிவிருத்தி அதிகார
சபையிடம் கையளிக்கப் போவதாக முகாமைத்துவசபை பத்திர சுற்றுநிரூபம்
அனுப்பப்பட்டிருந்தது. எமது உரித்துக்களைப் பறிக்காதீர்கள் திரும்பத்
தாருங்கள் என்று நாங்கள் போராடி வருகின்றோம். சட்டத்திற்கு முரணாக எங்கள்
உரிமைகள் உங்களால் தடைசெய்யப்பட்டு கையேற்கப்பட்டுள்ளது.
சுற்றுநிரூபத்தை
இரத்துச் செய்து முன்னிருந்த உரிமைகளைத் திரும்பத் தாருங்கள் என்று நேற்று
எமது வடமாகாணசபையில் நாங்கள் பிரேரணை கொண்டுவந்து ஏற்றுக்கொண்டுள்ளோம்.
ஆகவே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்பட்ட சொற்ப
உரித்துக்களையுந் திரும்பப் பெறப்பார்க்கின்றது அரசாங்கம்.
ஒரு சில
பெரும்பான்மை அரசியல்வாதிகளும் எமது சிங்கள சகோதரர்கள் சிலரும் ஒரு
விசித்திரமான கருத்தை முன்வைக்கின்றார்கள். “நாங்கள் தருவதையுந்
தரமாட்டோம், நீங்கள் தகாத முறையில் “தா” என்று கேட்டால்” என்று
கூறுகின்றார்கள். எப்பொழுதையா நீங்கள் தந்தீர்கள்? தருவதாகக் கூறினீர்களே
ஒளிய தரவில்லையே! நீங்கள் தராத ஒன்றைத்தானே தாருங்கள் என்கின்றோம். எம்
உரித்துக்களைப் பறித்து வைத்துக் கொண்டு வெறுமனே தருவதாக 60 வருடங்களுக்கு
மேலாகக் கூறிக் கொண்டு வந்து விட்டு இப்பொழுது “நீங்கள் கேட்டால்
தரமாட்டோம்” என்பதன் அர்த்தம் என்ன? நாம் நினைத்ததைத் தான் தருவோம்.
நீங்கள் கேட்பதைத் தர மாட்டோம் என்பது தானே அர்த்தம்? ஆனால் சட்டத்தில்
அப்படிக் கூறப்படவில்லையே. உரிமைகள் உரித்துக்கள் பெரும்பான்மை மக்களுக்கு
மட்டுந் தான் சிறுபான்மையினருக்கு அல்ல என்று சட்டம் கூறவில்லையே!
மேலும்
வடக்குக் கிழக்கில் 2000 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பேசும் மக்கள் தான்
பெரும்பான்மையினர். ஆகவே நாங்களும் எங்கள் பிரதேசங்களில்
பெரும்பான்மையினரே. எனினும் சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு நீதி
சிறுபான்மையினருக்கு ஒரு நீதி என்று கூறவில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்குஞ்
சில பல உரித்துக்கள் இருப்பதைச் சட்டம் அங்கீகரிக்கின்றது,
ஏற்றுக்கொள்கின்றது. அதற்கு மேலாகக் குழுமங்களின், மனித குழுக்களின்
உரித்துக்களையும் சட்டம் ஏற்றுள்ளது.
நாம் இழந்த உரிமைகளை ஜனநாயக ரீதியில்
மீளப் பெறுவதற்கு முயற்சிப்பது வகுப்புவாதமாகவோ, தீவிரவாதமாகவோ, அநீதியாகவோ
கருத முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நியதிகளுக்கு அமைவாக
ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமை சாசனங்களின் அடிப்படையில் ஒரு இனத்தின் உரிமைகள்,
அடையாளங்கள் மற்றும் மரபு ரீதியான, சரித்திர ரீதியான வதிவிடங்கள்
ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எட்டுதலே
எமது குறிக்கோளாகும்.
1987ம் ஆண்டில் நாங்கள் பதின்மூன்றாவது திருத்தச்
சட்ட மூலம் தந்தோம் அல்லவா என்கின்றார்கள் சில சிங்களத் தலைவர்கள்.
நீங்கள் எங்கே தந்தீர்கள்? அது இந்தியாவின் அனுசரணையால் கிடைத்தது. அதுவும்
இந்தியர்களுக்குத் தெரியாமல் சட்டத்தைப் பலமற்றதாக மாற்றிய பின்னரே
தரப்பட்டது. தருவதற்கு உங்களுக்கு மனமிருந்தால் நாங்கள் கேட்காமலே
தந்திருப்பீர்களே!
இந்த யதார்த்தத்தைத்தான் தமிழர் விடுதலைக்
கூட்டணியின் முன்னாள் தலைவர்கள் அமரர் அமிர்தலிங்கம், அமரர் சிவசிதம்பரம்
ஆகியோரும் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
திரு.இரா.சம்பந்தன் அவர்களும் 28.10.1987ம் ஆண்டு முன்னாள் இந்தியப்
பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வெகு விபரமாக எழுதி
அவருடைய தலையீட்டை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உங்களை எவ்வளவு நம்பினார்? 2016ல்
கட்டாயம் தருவார்கள் என்று எதிர்பார்த்தார். தந்தீர்களா? உங்களுக்குத் தர
மனமில்லை என்பது உலகறிந்த விடயம். எனவே நாங்கள் கூட்டம் கூடிக் கேட்க
வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ளியது நீங்களே என்று அரசாங்கத்தைப்
பார்த்துக் குறை கூறுகின்றேன். எங்கள் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதும்
உங்களாலேயே என்று குற்றம் சாட்டுகின்றேன்.
முன்னைய ஜனாதிபதியின்
காலத்தில் அவர் 18 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தினார் தமிழர்களுடன். ஏதேனுந்
தந்தாரா? இப்பொழுது ஜெனிவாவில் மார்ச் மாதத்தில் கூட்டம் போடப்
போகின்றார்கள் என்றதும் அதைத் தரப்போகின்றோம், இதைத் தரப்போகின்றோம் என்று
விட்டு இன்று வரையில் ஒன்றுமே தரவில்லை, தர எத்தனிக்கவும் இல்லை.
இருபதுக்கு மேலான உத்தரவாதங்களை இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் சர்வதேச
சமூகத்திற்கு 2015ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் அளித்தது. எவ்வெவற்றை
இதுவரையில் நிறைவேற்றியுள்ளார்கள்? நிறைவேற்றியதாகக் கூற
எத்தனிப்பவைகளிலும் மக்களுக்கு பயன் ஏதும் கிடைத்துள்ளதா? மாறாக அரசியல்
யாப்பு உருவாக்கத்தின் நிமித்தம் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என்று
சந்திரிக்கா அம்மையார் கூறியுள்ளார்.
இவை இரண்டுக்கும் தொடர்பே இல்லை.
ஒன்று நடந்து முடிந்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மற்றையது இன்னும்
நடைபெறாதது. அரசியல் சம்பந்தமான எமக்கிருக்கும் உரித்துக்களைத் தர,
எம்மிடம் இருந்து பறித்தெடுத்த உரித்துக்களைத் தர, பாதிக்கப்பட்ட
எம்மக்களின் நலனையும் உரிமைகளையும் விலைபேசப் பார்க்கின்றாரா சந்திரிக்கா
அம்மையார்?
அதுமட்டுமல்ல. அண்மைக் காலங்களில் எமக்கு ஏற்கனவே
இருக்கும் உரித்துக்களைத் திரும்பப் பெறும் கைங்கரியத்தில் ஈடுபட்டு
வருகின்றது அரசாங்கம். மேலும் எம்மாகாணக் காணிகளில் தென்னவர்களைத்
தேர்ந்தெடுத்துக் குடிவைக்கின்றார்கள். எம்மவரை அவற்றிலிருந்து
துரத்துகின்றார்கள். எமக்கிருக்குங் காணி உரித்துக்களைத் தமதாக்கிக் கொண்டு
மேலும் மேலும் படையினருக்கு மேலதிகக் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுத்து வருகின்றார்கள்.
தாம் செய்யுந் தவறுகளை மூடி மறைத்து விட்டு எம்மேல் பழியைப் போட எத்தனிக்கின்றது அரசாங்கம்.
இந்நிலையில் தான் நாம் மிகவும் விழிப்படைய வேண்டிய ஒரு தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.
எமது அரசியல் தேவைகள் மற்றும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகள்
ஆகியவற்றை இந்த அரசின் புதிய அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற
வகையிலான சில அரசியல் அறிவுரைகளை அரசுக்கு எடுத்துக் கூறுகின்ற அத்துடன்
மக்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு நிகழ்வாகவே “எழுக தமிழ்”
நிகழ்வை நாம் அன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்திருந்தோம். ஆனால் அதன்பின்
எம்மைப் பலரும் பல விதமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கியது மட்டுமன்றி நாம்
புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முத்தாய்ப்பு வேலைகளில்
ஈடுபடுகின்றோம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பலத்தையுங் கூறுபோடுகின்ற
செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம் என எமது தமிழ் அரசியல் தலைமைகள் கூட
நேரடியாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் கருத்துக்களை
முன்வைக்கத்தலைப்பட்டனர். அவர்களுக்குப் பக்கபலமாக நாங்கள் நிற்கின்றோம்
என்பதை மறந்து அவ்வாறு கூறத் தலைப்பட்டார்கள்.
அதேபோன்று சிங்களத்
தலைமைகளும் எம்மை அடிப்படைவாதிகள், அரசியல் குழப்பத்தை உண்டுபண்ண
முயல்பவர்கள் எனப் பல்வேறு விதமாக சித்திரித்ததுடன் நாம் அரசுக்கு எதிரான
தீவிரவாதப் போக்கைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம்
என்ற தவறான கருத்துக்களையும் முன்வைக்கத் தலைப்பட்டனர்.
நாம் அன்று
தெரிவித்த அதே கருத்துக்களையே இன்றும் வலியுறுத்துகின்றோம். ஏனென்றால் எமது
கருத்துக்கள் கடந்த 69 வருடகாலமாக எம்மால் கூறப்பட்டுவரும் கருத்துக்களே.
அதில் மாற்றம் எதுவுமில்லை. புதிதாக நாம் எதுவுங் கேட்கவில்லை. எமது
தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறி எம் மக்கள் அங்கீகரித்த அதே கருத்துக்களையே
நாம் கூறி வருகின்றோம்.
வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி
அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பன நேற்று இன்று முன்வைக்கப்பட்ட
கருத்துக்கள் அல்ல. இந்தக் கருத்துக்கள் அன்று முன்வைக்கப்பட்டதாலேயே
பண்டாரநாயக்கா –செல்வநாயகம் உடன்பாடு உருவாகியது. ஆனால் சிலரின் உன்மத்த
உறழ்வுகளால் அந்த உடன்பாடு கிழித்தெறியப்பட்டது. டட்லி - செல்வநாயகம்
உடன்பாடும் அதே கருத்துக்களையே பிரதிபலித்தன. ஆனால் அந்த உடன்பாட்டுக்கும்
அதே கதியே. இந்தியாவின் அனுசரணையால் 13வது திருத்தச்சட்டம் யாக்கப்பட்டதால்
இதுவரையில் அது நடைமுறையில் இருக்கின்றது.
ஆனால் அதனையுஞ் சட்டங் கொண்டும்
சுற்றறிக்கைகள் கொண்டும் மலினப்படுத்தியுள்ளார்கள் மத்தியில் உள்ள
பெரும்பான்மை இனத் தலைவர்கள். எனவே தான் எமது கோரிக்கைகளை மேலும் முன்வைக்க
வேண்டிய அவசியம் எமக்கெழுந்துள்ளது. நாங்கள் குழப்பம் விளைவிக்கவில்லை.
குழப்பத்திற்குக் காரணமே தொடர்ந்து வந்த பெரும்பான்மையின அரசியல்த்
தலைவர்கள் தான். கூட்டாட்சி என்றால் பிரிவினையே என்ற பொய்யை சிங்கள
மக்களுக்கு இதுகாறும் கூறிவந்தவர்களும் இந்தத் தலைவர்களே.
இலங்கையில்
இடம்பெற்ற பாரிய இன அழிப்பு யுத்தமானது 2009ம் ஆண்டில் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்ட நிலையிலும், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள்
கொன்று குவிக்கப்பட்டு இன்னும் பலர் ஊனமுற்றவர்களாக எழுந்து நடமாட
முடியாதவர்களாக மாற்றப்பட்ட நிலையிலும், வீடு, வாசல், சொத்து, சுகம், காணி,
பூமி என அனைத்தையும் இழந்து கையறு நிலையில் ஏதிலிகளாக எமது மக்கள்
செய்வதறியாது திகைத்து நின்ற வேளையிலும் நாம் ஐக்கிய இலங்கைக்குள் சம~;டி
முறையிலான ஒரு அரசியல் தீர்வையே நாடியிருந்தோம்;
நாடுகின்றோம். எனினும்
அரசியல் யாப்புக்களில் பூரணமான அல்லது வலுவான திருத்தங்களை மேற்கொள்ள
விழைந்தால் அவற்றை சர்வஐன வாக்கெடுப்புக்களின் மூலமே நிறைவேற்ற வேண்டி
வரும் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் எனப் பூச்சாண்டி
காட்டித் தீர்வுகளை மலினப்படுத்துவதும், அடிப்படையாகக் கொடுக்க
வேண்டியவற்றை கொடுக்காமல் விடுவதற்கு அதனை ஒரு சாட்டாக கைக்கொள்கின்ற
யுக்தியையும் அரசுகள் கடைப்பிடித்து வந்துள்ளன.
இதே தந்திரத்தையே
இப்பொழுதும் ஒரு சாரார் கையாள முயற்சிக்கின்றனர். இது நாம் எழுந்தமானமாகச்
சொல்லுகின்ற ஒரு கருத்தல்ல. இந்த அரசில் அங்கம் வகிக்கின்ற இரு
பெரும்பான்மை அரசுக் கட்சிகளும் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு
ஒற்றையாட்சிக்குஅமைவாகவே தொடரும் என்றும் இந்த நாட்டில் சம~;டி அரசியல்
அமைப்பிற்கு இடமில்லை எனவும் இந்த நாடு மத சார்பற்ற நாடாக மாறாது என்றும்
உரக்கக் கூறுவதை நாம் காண்கின்றோம்.
அதற்கும் மேலாக ஒரு அரசியல் தலைவர்
13வது அரசியல் அமைப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலே
மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது பற்றி சிந்திக்கின்ற தருணம் இதுவல்ல
என்று கண்டி மாநகரில் வைத்து தெரிவித்திருப்பது கவனிக்கப்படல் வேண்டும்.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது அரசியல் அமைப்பு திருத்தத்தில் இப்போது
இருக்கின்ற நிலையை விட ஒரு சிறு முன்னேற்றங் கூட ஏற்படும் என்று எண்ணத்
தோன்றவில்லை. இது எமக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது “எழுக தமிழ்” நிகழ்ச்சியையும் விட
உறுதியாகவும் ஆக்கோரசமாகவும் எமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய தேவை
இப்போது ஏற்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் கூறிவைக்க
விரும்புகின்றேன்.
மீண்டும் மீண்டும் எங்களுடைய கோரிக்கைகளை நாம்
உரத்துச் சொல்ல வேண்டிய தேவையும் கடப்பாடும் தமிழ் மக்களுக்கு
ஏற்பட்டுள்ளது. அந்த வகையிலே இந்த “எழுக தமிழ்” நிகழ்வானது மேலும்
முக்கியத்துவம் பெறுகின்றது. வெளிநாட்டவர்கள் எம் நாட்டில் யுத்தம் முடிந்த
பின் நடந்து வருவதை நன்றாக உணர்ந்துள்ளார்கள். ஆகவே ஜனநாயக
விழுமியங்களுக்கு அமைவான எங்களுடைய நடவடிக்கைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள்
வரவேற்கின்றன என்றே நான் கூறுவேன். அண்மையில் ஒரு வெளிநாட்டுத் தூதுவர்
“ஏன் சமஷ்டிக்கு உங்கள் நாட்டில் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள், சமஷ்டி
முறைதானே யாவரையும் சேர்த்துக் கொண்டு முன்னேறக் கூடியது” என்றார். அதற்கு
நான் “பிரித்தானியர் வெளியேறும் போது பெரும்பான்மையினத்தவர்களுக்கு கூடிய
அதிகாரங்களையும், வலுவையும் கொடுத்துச் சென்று விட்டார்கள். அதைத்
தொடர்ந்து தக்க வைக்கவே அவர்கள் சமஷ்டியைப் பிரிவினை என்கின்றார்கள்”
என்றேன்.
நாம் முன்னெடுக்கின்ற இந்த“எழுக தமிழ்”என்ற நிகழ்வு தமிழ்ப்
பேசும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை ஜனநாயக முறைப்படி
கேட்டெடுத்துப் பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியே தவிர அரசியல்
குட்டையைக் குழப்பும் எண்ணமோ அல்லது வேறு எந்த கபட நோக்கோ எமக்கில்லை.
மாறாக இந்த நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பூர்வீக
பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமான ஒரு தேசிய இனம், தமது இருப்பை உறுதி
செய்து தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவதற்கு ஏற்ற ஒரு
அரசியல் அமைப்பைப் பெற்றுக் கொள்ளவே விழைகின்றது. எமது நடவடிக்கைகளை
சர்வதேச அரசியல் அமைப்புக்களும் மற்றும் ஐக்கிய நாடுகள் தாபனங்களும்
நன்குணர்ந்து எமக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
என்று நாம்
விரும்புகின்றோம். எங்கள் அரசியல் கோரிக்கைகள் நியாயமானவை. நாங்கள்
பிரிவினை கோரவில்லை. சம~;டியையே கேட்கின்றோம். கனடா, பெல்ஜியம்,
சுவிற்சர்லாந்து போன்று நாட்டை ஒருமைப்படுத்தி தன்மானத்துடனும்
ஐக்கியத்துடனும் வாழவே விரும்புகின்றோம்.
எனினும் நாங்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உண்டு. அவைபின்வருமாறு -
1. யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் பூர்த்தியடைய இருக்கும் நிலையிலும்
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னும்
முழுமையாக விடுவிக்கப்படாதது ஏன்? மேலும் மேலும் கூடிய காணிகளைக்
கையகப்படுத்த விளைவது ஏன்? எமது சில உரித்துக்களைத் தட்டிப் பறித்து அதிகார
சபை ஒன்றிடம் கையளிக்கப் பார்ப்பதின் தாற்பாரியம் என்ன? சட்டத்திற்குப்
புறம்பாக வெளிமாகாணங்களில் இருந்து கொண்டு வந்து வடமாகாணத்தினுள்
பலாத்காரமாக குடியேற்றியுள்ள சிங்கள குடியேற்ற வாசிகளின் இருப்பிடங்களைத்
தமிழ் உள்ளுராட்சி வட்டாரங்களுடன் சேர்க்க முனைவதன் தந்திரம் என்ன?
2. புத்த கோவில்கள் அமைப்பது தொடர்பில் நாம் மிகத் தெளிவான கருத்துக்களை
முன்வைத்திருந்தோம். புத்த கோவில்கள் கட்டுவதில் எமக்கு எவ்வித
ஆட்சேபணைகளும் இல்லை.ஆனால் புதிதாக அமைக்கப்படுகின்ற கோவில்கள் எந்த மதம்
சார்ந்ததாக இருப்பினும் எங்கே? எப்படி? எவரால்? அமைக்கப்பட வேண்டும்
என்பதிலேயே கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன என்று கூறியிருந்தோம். பௌத்த
மதத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் புத்த கோவில்களை அமைப்பதற்கு
நாம் எதுவித மறுப்புக்களையுந் தெரிவிக்;கவில்லை. அவர்கள் அவற்றுக்கான உரிய
அனுமதிகளை முறையாகப் பெற்று புதிய கோவில்களை அமைத்துக் கொள்ளமுடியும்.
அப்படியல்லாது பௌத்தர்கள் எவரும் நிரந்தரமாக குடியிருக்காத பகுதிகளில்
எந்தவித முன்னனுமதிகளும் இன்றி தனியார்களின் காணிகளிலும் இராணுவத்தினர்
உதவியுடன் அடாத்தாக கைப்பற்றப்பட்ட அரச காணிகளிலும் புதிய புதிய பௌத்த
கோவில்களை அமைப்பதும் பிற மத வணக்கத்தலங்களை இடித்து அழிப்பதுமாகிய
செயற்பாடுகளில் ஈடுபடுவது எதற்காக?
3. பாரிய உடல் உபாதைக்கு உள்ளான
அங்கவீனர்கள் வன்னி மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் உதவிக்காக
காத்திருக்கின்றனர். எனினும் அரசினால் வழங்கப்படுகின்ற நிதி 300 பேர்
வரையான பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடியதாக உள்ளது. இந்நிலையில் உதவி
பெறுநர் ஒருவர் மரணிக்கின்ற வேளையிலேயே இன்னொருவருக்கு இவ்வுதவி கிடைக்கக்
கூடிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
போரினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கின்றோம் என பெருமளவில்
விளம்பரம் செய்யும் அரசு மிகவும் அவசரமான அடிப்படைத் தேவைகளைக் கொண்ட
மாற்றுத் திறனாளிகளுக்கு அல்லது அங்கவீனர்களுக்கு கூட உதவ முடியாதிருப்பது
ஏன்? அசூயையா? அக்கறையின்மையா? அலட்சியமா? அரசியல்ப் பழிவாங்கலா?
4.
பொருத்து வீடுகள் வேண்டாம் என்றதும் வங்கிக் கடன் பெற்று வீடுகள் கட்டித்
தருவதாகக் கூறப்பட்டது. ஆனால் திரும்பவும் பொருத்து வீடுகளை எம்
மாகாணத்தில் அறிமுகப்படுத்த விளைவதன் மர்மம் என்ன?
5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கைவாங்காமல் அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்?
6. விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின்
புலிகள் திரும்பவும் வந்துவிட்டார்கள் அல்லது வரப் போகின்றார்கள் என்று
பூச்சாண்டி காட்டுவது என்ன காரணத்திற்காக?
அதுவும் எமது மக்கள் வன்முறை
களைந்து ஒருமித்த ஒரு நாட்டினுள் சமஷ்டியே சிறந்தது என்று கனடா,
சுவிற்சர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளின் முன்மாதிரியை எடுத்துக் காட்டி
ஜனநாயக ரீதியாக அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்ல முன்வந்திருக்கும்
இந்த நேரத்தில் இவ்வாறான பொய்யான புனைந்துரைகளைப் பகர்வதின் நோக்கம் என்ன?
7. காணாமற் போனவர்கள் சம்பந்தமாக வலுவற்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து
விட்டு அதைக் கூட நடைமுறைப்படுத்த முன் வராததின் காரணம் என்ன?
இறுதியாக ஒரு முக்கிய விடயத்தை இந்த மட்டக்களப்பு மண்ணில் கூற
விரும்புகின்றேன். இன்றைய நிலையில் இந்த நாட்டில் தமிழ் மொழியைப் பேசுகின்ற
தமிழ் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் ஒன்றாக இணைந்து கொண்டு அரசின்
நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும் எமது அரசியல் உரிமைகளை
வென்றெடுப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்தும் முயற்சிக்க
வேண்டும்.
தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் அரசு ஈடுபட்டிருந்த
வேளையில் தமது போர் யுக்திகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் பல்வேறு
தேவைகளுக்கும் முஸ்லீம் அரசியல் கட்சிகளைத் தம்முடன் இணைத்துக் கொண்டு
அவர்களுக்கு மேலதிக அமைச்சுக்கள் எனப் பல சலுகைகளை வழங்கி தமிழ் பேசும்
மக்களிடையே பிரிவினையை வளர்க்க முற்பட்டது.
இன்று தமிழ் மக்களுக்கு எதிரான
ஆயுதப் போராட்டம் முடிவடைந்த நிலையில் பெரும்பான்மை இனத்தின் கழுகுப்
பார்வையை முஸ்லீம் சகோதரர்கள் மீது திருப்பி முஸ்லீம்களின் வணக்கத் தலங்களை
உடைப்பதும்; குடியேற்றங்கள் தொடர்பில் இன ரீதியான கருத்துக்களை
முன்வைப்பதும், துவேச மனப்பான்மையை வளர்ப்பதும் எதற்காக?
எனது
நண்பரும் தமிழ்ப் பற்றாளருமான அமரர் ஆர்ஆ அஷ்ரப் அவர்கள் 1975ம்
ஆண்டிலிருந்து தந்தை செல்வா அவர்களின் விசுவாசியாக இருந்தவர். 1976ம் ஆண்டு
பெப்ரவரி மாதம் 2ந் திகதி புத்தளம் பள்ளிவாசலில் 06 முஸ்லீம்கள் படுகொலை
செய்யப்பட்ட போது அக்காலத்தில் நாட்டிலிருந்த எந்தவொரு முஸ்லீம்
தலைமைப்பீடங் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.
தந்தை செல்வா அவர்கள் மாத்திரம்
இவ்விடயம் சம்பந்தமாகக் கண்டனம் தெரிவித்து தமிழ் பேசும் முஸ்லீம்
மக்களுடனான எமது ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் காரணியாக இருந்தார்.
அதுமாத்திரமன்றி 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தம்பி அஷ்ரப்
அவர்கள் பங்குபற்றியிருந்தார் என்று எனக்கு ஞாபகம்.
சுதந்திரத்தின்
பின்பு அனேகமான முஸ்லீம் தலைவர்கள் தமிழரசுக் கட்சி வேட்பாட்டாளர்களாகப்
போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழ் முஸ்லீம்
மக்களுக்கு வேறுபாடின்றி சேவையாற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில்
தமிழர்களும் முஸ்லீம்களும் பிட்டும் தேங்காய்த் திருவலும் போல இரண்டறக்
கலந்தவர்கள், பிரிக்கவே முடியாதவர்கள். என்று கூறியவர் வேறுயாருமல்ல
காலஞ்சென்ற அமரர் அஷ்ரப் அவர்களே.
மேலும் முஸ்லீம் மக்களில் பலர் தமிழ்
மொழியில் மிக்க பாண்டித்தியமும், புலமையும் கொண்டவர்களாக
திகழ்ந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல. இன்றும் தமிழ் மொழியை மிகவும்
நேசிப்பவர்களாகவும் இச்செம்மொழியை மேம்படுத்துவதற்கு உழைப்பவர்களாகவும்
உள்ளார்கள். எம்முடன் கிழக்கு முஸ்லிம் தமிழ் அறிஞர்கள் கொழும்பு கம்பன்
கழக விழாவில் பங்கு பற்றி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிவரும் சேவைகள்
மறக்கமுடியாதன.
ஆனால் 1980ம் ஆண்டின் நடுப்பகுதிகளின் பின்னர் இடம்
பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அரசியல் கருத்து வேற்றுமைகளும் எம் இரு
சமூகத்தவர்களுக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிவிட்டது. இருந்த போதிலும்
உரிய தேவையான சந்தர்ப்பங்களில் இயற்கையாகவே சகோதரர்களாக நாம் மாறிவிடுவதை,
ஒன்றுபட்டு நாம் உழைப்பதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.
மேற்கூறியவாறு ஏற்பட்ட சில சம்பவங்கள் எம்மிடையில் ஆறாத வடுக்களை
ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. இருந்த போதிலும் தமிழ்த் தாயின்
புதல்வர்கள் என்ற முறையில் முன்னர் எவ்வாறு எப்படி ஒற்றுமையை
நிலைநாட்டினோமோ அவ்வாறே இன்றும் வேறுபாடுகளைக் களைந்து எமது உரிமைகள்
ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு பறிக்கப்படும் போது நாம்
ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குரலோடு எமது கோரிக்கைகளை முன்னெடுக்கவும்
வென்றெடுக்கவும் முன்வரவேண்டும்.
தமிழ் முஸ்லீம் ஒற்றுமை முயற்சிகளை
முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்கள் பேரவை தன்னாலான அனைத்து முயற்சிகளிலும்
ஈடுபடுவதுடன் சகல இனப் பாதுகாப்பிற்காகவும் நாம் அல்லும் பகலும்
பாடுபடுவோம். எம்முடன் நீங்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி, பிரதேச வாதம்,
வர்க்க பேதம் இன்றி, ஆண் பெண் பேதமின்றி, மத பேதமின்றி அரசின் தவறான
நடவடிக்கைகளைக் கண்டிக்க முன் வரவேண்டும்.
தமிழ்ப்பேசும் மக்களுக்கு ஒரே
அரசியல்த் தீர்வாக விளங்கக் கூடிய சம~;டி அரசியல் அமைப்பின் தேவையை
வலியுறுத்த¬ வேண்டும். முஸ்லீம் மக்களுக்கும் ஒரு சம~;டி அலகு வழங்கப்பட
வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது ஒற்றுமையை கிறீஸ்தவ
இந்துத் தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் உலகறியச் செய்ய
வேண்டும். இதற்காக எமது குரல்கள் யாவும் ஒருமித்து ஓங்கி ஒலிக்கட்டும்.
வாழ்க தமிழ்! எழுக தமிழ்!
0 comments:
Post a Comment