இதுவரை நடந்த சனாதிபதி தேர்தல்களை போல் இல்லாது, வேறுபட்ட சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலைத் தமிழ்
பேசும் மக்கள் எதிர்நோக்கி இருக்கின்றார்கள். 1982 இலிருந்து 2005 வரை நடந்த ஐந்து தேர்தல்களும் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கிடையில் நடந்தது. 2010 ஆம் ஆண்டு யுத்தம் இல்லாவிட்டாலும், மக்கள் போர்ச்சூழலில் இருந்து முழுவதுமாக வெளியே வந்திருக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு தேர்தலில் போர்முகங்கள் எல்லாம் விலகி, அனைத்து தமிழ் பேசும் மக்களும் தேர்தலில் வாக்களித்துப் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றார்கள். இந்த தேர்தலில் போர் நடந்த போது தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.
அடுத்து நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தலானது, தமிழ் பேசும் பூரண விடுதலை அடைந்த சமூக வாழ்க்கை நிலைமைக்கான வெகுசன இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ள காலகட்டத்தில் நடக்கின்றது.
எவரேனும் ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலமோ, வாக்களிப்பை பகிஷ்கரிப்பதன் மூலமோ தேர்தலில் பங்கெடுக்க முடியும். வாக்களிப்பை பகிஷ்கரிக்கும் தீர்மானத்தை எடுப்பவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கும். வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் நியாயமான, தெளிவான காரணங்களை வகுத்துக் கொள்வது அவசியமாகும்.
எட்டாவது சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட எவருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கட்சித் தலைவர்கள் சொல்கின்றார்கள், கட்சிகள் சொல்கின்றது, ஊடகங்கள் சொல்கின்றது என்பதற்காக யாருக்கும் வாக்களிக்கக் கூடாது. வெற்றி பெறுபவர்களுக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையிலும் வாக்களிக்கக் கூடாது. ஒருவருக்கு வாக்களிப்பதற்கான நியாயமான அரசியல் காரணங்களை ஆராய்ந்த பின்னரே வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் அரச நிர்வாகத்தில் எமது கருத்தைப் பதிவு செய்யும் வழிகளில் ஒன்றே வாக்களிப்பாகும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் வெற்றிபெறுபவரா என்பது முக்கியமானது அல்ல. எமது அரசியல் அபிலாசை வெளிப்படுத்தப்படுகின்றதா என்பதே முக்கியமானது.
அந்த வகையில், தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானோர் சஜீத் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பது குறித்துச் சிந்திப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால், போட்டியிடும் 35 வேட்பாளர்களில்; வாக்களிக்கக் கூடாத முதலாவது வேட்பாளர் சஜீத் பிரேமதாச ஆவார். அதற்கான 100 காரணங்களை முன்வைப்பதே இப்பந்தி தொடரின் எதிர்பார்ப்பாகும்.
சஜீத் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர். ஐதேக வும், ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் பேசும் மக்களுக்குச் சார்பானவர்கள் என்ற மாயை தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலும் இருந்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசு போன்ற கட்சிகள் ஐதேக வுடன் சகவாசம் வைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.
ஐதேக அடிப்படையில் இலங்கையின் சிங்கள சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நகர்ப் புற பிரபு வர்க்கத்தினரால் ஆளுமை செய்யப்படும் கட்சியாகும். காலம் காலமாகச் செல்வந்த பிரபு வர்க்க குடும்பமான விஜேவர்தனா குடும்பத்தால் ஆதிக்கம் செய்யப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரபுவர்க்க சார்புத் தன்மையானது அதன் தேசிய. சர்வதேசிய கொள்கைகளின் தன்மையையும் நிர்ணயிக்கின்றது. எனவே தான், ஐதேக எப்போதும் தீவிர அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு கொள்கையைக் கடைப்பிடிக்கும்
கட்சியாக இருக்கின்றது. ஐதேவை ஆளுமை செய்யும் பிரபு வர்க்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளையும் ஒத்துப்போகச் செய்வதற்கு அவர்களின் வாழ்வியல் பண்பாடான அங்கிலிக்கன் மத பண்பாடு ஏதுவாக இருக்கின்றது.
எனவே, ஐதேகவின் தேசிய கொள்கைகள் எப்போதும் அவர்களின் நண்பர்களான அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும்அ வர்களது கூட்டாளிகனதும் நலன்களைப் பூர்த்தி செய்யவதாக இருக்கின்றது.
இலங்கையில் சுயதேவையை சுயமாகப் பூர்த்தி செய்யும் - சுய தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் உள்ளூர் உற்பத்திக்கே முதல் இடம் கொடுக்க வேண்டும். அதன் பின்னரே தேவையானவற்றை இறக்குமதி செய்ய வேண்டும். இறக்குமதி செய்வதற்கான பணத்தை உள்ளூரில் ஏற்றுமதி செய்யக் கூடிய உற்பத்திகளை வளர்ப்பதன் மூலம் தேடிக் கொள்ள வேண்டும். இது தான் மிக அடிப்படையான பொருளாதார திட்டம்.
ஆனால், ஐதேக 1977 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியார்கள் கட்டுப்பாடில்லாமல் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பொருளாதார கொள்கையை மாற்றி அமைத்தது. திறந்த பொருளாதார கொள்கை எனப்படும் இதற்கு மக்களைப் பழக்கப்படுத்த வேண்டும் என்றால், மக்களின் சிந்தனையில், பழக்க வழக்கங்களில், பண்பாட்டில், கலாச்சாரத்தில் அதற்கே உரிய மாற்றங்கள் உருவாக வேண்டும். ஐதேக மக்களில் அந்த மாற்றங்களை உருவாக்கும் வகையிலேயே கல்வித் துறை உட்பட அரச நிர்வாகத்தைக் கொண்டு நடத்துகின்றது.
கட்டுப்பாடில்லாத திறந்த பொருளாதார கொள்கையில் நன்மை ஈட்டுவது அந்திய முதலீட்டாளர்களும் அவர்களுடன் கூட்டு வைத்திருக்கும் உள்ளூர் பிரபு வர்க்கமும் தான். இந்த பிரபு வர்க்க கூட்டின் நலன்களுக்காக வேலை செய்வதன் மூலம் உள்ளூரில் ஒரு சிறு குழுவும் நன்மை அடைந்து கொள்கிறது.
இந்த பிரபுவர்க்க கூட்டில் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த பிரபு வர்க்கமும், அவர்களின் நலன்களுக்கு வேலை செய்யும் குழுவினரும் சேர்ந்திருப்பதால் வெளித் தோற்றத்திற்கு ஐதேக தமிழ் பேசும் மக்கள் சார்பான கட்சியா தெரிகிறது. இது அடிப்படையில் மாயையானதாகும். ஐதேக கட்சி தமிழ் பேசும் சமூகத்தின் பிரபு வர்க்கத்தையும், அவர்களின் நலன்களுக்கானவர்களுக்கும் மாத்திரமே சாதகமான கட்சியாகும். சாதாரண மக்களுக்குச் சார்பான கட்சியாகும்.
பிரபு வர்க்கத்தினரும் அவர்களின் கூட்டாளிகளும், ஊடகம், மதம் உட்பட சமூக ஸ்தாபனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களின் கருத்தியலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இதன் மூலம் இவர்களால் ஐதேக தமிழ் மக்களுக்குச் சார்பான கட்சி என்ற மாயையை ஏற்படுத்த முடிந்திருந்தாலும், இதன் போலித் தன்மையைக் கடந்த நான்குவருட கூட்டாட்சி அம்பலப்படுத்தி விட்டது.
அந்த வகையில் ஐதேக சாதாரண மக்களின் நலன்களுக்கு எந்த வகையிலும் நியாயம் செய்யக் கூடிய கட்சி அல்ல. பிரபு வர்க்கத்தின் நலன்களுக்கு மாத்திரமே நலன் செய்யும்.
மிக எளிமையாகக் கூறுவதானால், சம்பந்தனுக்கும், மனோகனேசனுக்கும், திகாம்பரத்துக்கும். ரிசாட் பதியுதினுக்கும், ஹக்கீமுக்கும் அவர்களின் பின்னால் இருக்கும் பிரபு வர்க்கத்துக்கும் கடந்த ஆட்சியில் நன்மைகள் ஏற்பட்டதே ஒழிய மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. மக்களுக்குக் கிடைத்ததெல்லாம் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான இலஞ்சம் மாத்திரமே.
எனவே, தான் மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டிய முதலாவது கட்சியாக ஐதேக கட்சியைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் எழுகின்றது.
0 comments:
Post a Comment