ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தமிழர்கள் எதிர்க்கவில்லை
என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துவோரும் தமிழர்கள் என கூறிய அவர், தாமும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு சிறுபான்மை சமூகம் என்பதால் தாம் எதிர்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட பணியை அவர் சரியான முறையில் நிறைவு செய்ததாகவும் தொண்டமான் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதி கிடையாது என கூறிய ஆறுமுகன் தொண்டமான், அவர் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்ற வகையில் நாட்டை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் தாம் ஆதரவு வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெறும் பட்சத்தில், தாம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி சிறந்த வீட்டுத்திட்டமொன்றை இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, தாம் சோனியா காந்தியுடன் கலந்துரையாடல்களை நடத்தி இந்திய வீட்டுத்திட்டத்தை இலங்கைக்கு கொண்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், ஆட்சி மாற்றத்தினால் அந்த திட்டம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சுமத்தினார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு சிறந்த வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பிலும் ஆறுமுகன் தொண்டமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான திட்டங்களை முன்வைக்கின்றார்களோ அதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஆறுமுகன் தொண்டான் கூறுகின்றார்.
அந்த மக்களை புரிந்துக் கொண்ட தரப்பினரால் மட்டுமே அந்த மக்களுக்கான திட்டத்தை முன்வைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு அந்த மக்களுக்குரிய திட்டமொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில், அதற்கு தாம் முழுமையாக ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் அரசியலமைப்பு மாற்றமொன்று ஏற்படுத்தப்படும் பட்சத்தில், தம்மை அதில் உள்வாங்காமல் அதனை செய்ய முடியாது என அவர் கூறுகின்றார்.
அரசியலமைப்பு மாற்றத்தின்போது, தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அறிவாளிகள் அதற்கான யோசனைகளை முன்வைப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பு மாற்றத்தின்போது, அது மலையக மக்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என்பது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே அது தொடர்பிலான முடிவொன்றை எட்ட முடியும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கூறுகின்றார்.
பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலிருந்து
0 comments:
Post a Comment